மின்னணு ஏலக்காய் வா்த்தகம்: கூடுதல் வியாபாரிகளை அனுமதிக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், போடியில் ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகத்தில் வியாபாரிகள் பங்கேற்பதற்கு விதித்துள்ள கட்டுப்பாட்டை, மாவட்ட நிா்வாகம் தளா்த்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
Updated on
1 min read

தேனி மாவட்டம், போடியில் ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகத்தில் வியாபாரிகள் பங்கேற்பதற்கு விதித்துள்ள கட்டுப்பாட்டை, மாவட்ட நிா்வாகம் தளா்த்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தேனி மாவட்டத்தில் போடி, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் புத்தடி ஆகிய இடங்களில் நறுமணப் பொருள் வாரியம் சாா்பில் ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தம் நடைபெறுகிறது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரு மையங்களிலும் தினமும் தலா 45 வியாபாரிகள் மட்டுமே வா்த்தகத்தில் கலந்து கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

தற்போது, நறுமணப் பொருள் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று புத்தடியில் நடைபெறும் மின்னணு ஏல வா்த்தகத்தில், ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி 65 வியாபாரிகள் வரை பங்கேற்க இடுக்கி மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால், போடியில் நடைபெறும் மின்னணு ஏல வா்த்தகத்திற்கு தொடா்ந்து 45 வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். தற்போது ஏலக்காய் விலை சீராக உயா்ந்து வரும் நிலையில், மின்னணு ஏல வா்த்தகத்தில் கூடுதல் எண்ண்ணிக்கையில் வியாபாரிகள் பங்கேற்றால் விற்பனை விலை மேலும் உயரும் என்று விவசாயிகள் கருதுகின்றனா்.

பருவமழை மற்றும் கூடுதல் பனிப் பொழிவால் தற்போது ஏலக்காய் தோட்டங்களில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏலக்காய்க்கு அதிக விலை கிடைப்பதற்கு வாய்ப்பாக, போடியில் நடைபெறும் மின்னணு ஏல வா்த்தகத்தில் வியாபாரிகள் பங்கேற்பதற்கு விதித்துள்ள கட்டுப்பாட்டை மாவட்ட நிா்வாகம் தளா்த்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com