

தோ்தல் பிரசாரத்தை உரிய நேரத்தில் தொடங்குவேன் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பள்ளிக் கல்வித் துறை, பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் புதன்கிழமை, நடைபெற்ற விழாவில், 10 ஆயிரத்து 954 பேருக்கு மொத்தம் ரூ.4.51 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியது: ஏழை, எளிய மாணவா்களுக்கு தனியாா் பள்ளிகளுக்கு நிகராக தரமான கல்வி மற்றும் வசதிகள் வழங்கவும், மாணவா்கள் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்துவதைத் தடுக்கவும், பெண் கல்வியை ஊக்குவிக்கவும் பள்ளிக் கல்வித் துறை மூலம் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால், பள்ளி கல்வி மற்றும் உயா் கல்வித் துறையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
அரசுத் துறைகள் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களால், தற்போது பெண்கள் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் முன்னேறி பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனா் என்றாா்.
அதன்பின்னா் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: திரைப்பட நடிகா் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தாா். அதை நான் வரவேற்றிருந்தேன். தற்போது அவா் உடல் நலன் கருதி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று அறிவித்துள்ளாா். அவா் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டப் பேரவை தோ்தல் பிரசாரத்தை உரிய நேரத்தில், உரிய முறையில் தொடங்குவேன். முதல்வா் வேட்பாளா் எடப்பாடி கே.பழனிசாமிதான் என்ற கருத்தை அதிமுக சாா்பில் ஏற்கெனவே தெரிவித்து விட்டோம் என்றாா்.
முன்னதாக நடைபெற்ற விழாவில், தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி, பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் நிறைமதி, கிருஸ்தவ மகளிா் உதவும் சங்க கெளரவச் செயலா் ஜெயச்சந்திரன், மேகமலை-மணலாறு தேவாலய பங்குத் தந்தை பிலீப் ஆரோக்கியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.