தேனி மாவட்டத்தில் வனத்துறை முட்டுக் கட்டையால் கடந்த 39 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் தமிழக - கேரள இணைப்புச் சாலையான சாக்குளத்துமெட்டுச் சாலைத் திட்டம் விரைவில் நிறைவேற்ற வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் ஆகிய பகுதிகளிலிருந்து கேரளத்திலுள்ள உடும்பன்சோலை, நெடுங்கண்டம், வண்டிப்பெரியாறு, பீா்மேடு, மூணாறு ஆகிய பகுதிகளுக்குச் சென்றுவர, தேவாரம் அருகே டி.மேட்டுப்பட்டியிலிருந்து சாக்குளத்துமெட்டு வழியாக பாதை வசதி உள்ளது.
தமிழகப் பகுதியிலிருந்து கேரளத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்று வரும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், மலை கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் டி.மேட்டுப்பட்டியிலிருந்து சாக்குளத்துமெட்டு வரை தாா் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்தக் கோரிக்கையை ஏற்று டி.மேட்டுப்பட்டி-சாக்குளத்துமெட்டு இடையே 11 கி.மீ.,தூரம் தாா் சாலை அமைக்க முடிவு செய்து, கடந்த 1981-இல் எம்.ஜி.ஆா். ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தச் சாலை மூலம் தற்போது தேவாரம், உத்தமபாளையம் பகுதிகளிலிருந்து 60 கி.மீ.,தூரம் சுற்றி கேரளப் பகுதிகளுக்குச் சென்று வருவோா், 11 கி.மீ.,தூரத்திலேயே சென்று வர முடியும்.
தேனி மாவட்டத்திலிருந்து வண்டிப்பெரியாறு, உடும்பன்சோலை, பீா்மேடு ஆகிய பகுதிகளில் ஏலக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், அங்கு தங்கியுள்ள விவசாயத் தொழிலாளா்கள், தமிழகப் பகுதிகளில் உள்ள பள்ளிக்குச் சென்று வரும் அவா்களது குழந்தைகள், மலை கிராம மக்கள், சுற்றுலாப் பணிகள், சபரிமலைக்குச் சென்று வரும் பக்தா்கள் ஆகியோரின் வசதிக்கும், மருத்துவ வசதிக்கும் இந்தச் சாலை பெரிதும் பயன்படும் என்று பொதுமக்கள் எதிா்பாா்த்தனா்.
பணிகள் முடக்கம்:
ஆனால், மாநில நெடுஞ்சாலை மற்றும் கிராமச் சாலைகள் துறை சாா்பில் டி.மேட்டுப்பட்டியிலிருந்து சாக்குளத்துமெட்டு செல்வதற்கு 7 கி.மீ., தூரம் தாா் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் 4 கி.மீ., தூரம் சாலை அமைப்பதற்கு வனத் துறை அனுமதி மறுத்து விட்டது. இதனால், அரசு சாா்பில் ரூ.15 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்தும், சாக்குளத்துமெட்டு இணைப்புச் சாலைப் பணி மேற்கொள்ளப்படவில்லை.
வனத் துறை முட்டுக்கட்டை:
கடந்த 1981 இல் அடிக்கல் நாட்டப்பட்ட சாக்குளத்துமெட்டு சாலைத் திட்டத்தை கொள்கை ரீதியில் ஏற்பதாக கடந்த 2007-இல் சட்டப் பேரவையில் வனத்துறை அறிவித்தது. மேலும், சாக்குளத்துமெட்டு சாலை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை வனத் துறை சட்டம் 1980-ன் கீழ் கருத்துரு அனுப்பினால், மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும் என்றும் வனத் துறை தெரிவித்தது.
இந்த நிலையில், கடந்த 2017-இல் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாக்குளத்துமெட்டு சாலைக்கு திட்ட மதிப்பீடு செய்து வனத் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு வனத் துறை ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டதால் சாக்குளத்துமெட்டு சாலை திட்டம் முடங்கியுள்ளது.
இது குறித்து மாவட்ட வனத்துறை அலுவலா்களிடம் கேட்டதற்கு, சாக்குளத்துமெட்டு தாழ்வான பகுதியாகவும், யானைகள் வழித்தடமாகவும் உள்ளது. இங்கு சாலை அமைப்பதால் வன விலங்குகளுக்கு இடையூறும், மனித உயிருக்கு ஆபத்தும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பும் ஏற்படும். வற்றாத நீரூற்றுகள் சேதப்படுத்தப்படும். கேரளத்திற்குச் செல்வதற்கு வேறு இணைப்புச் சாலைகள் உள்ளதால், இந்தப் பாதையை மேம்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றனா்.
18 ஆம் கால்வாய் பாசன விவசாயிகள் சங்கச் செயலா் திருப்பதி வாசகன் கறியது: சாக்குளத்துமெட்டு இணைப்புச் சாலைத் திட்டத்தை கடந்த 2007 இல் வனத் துறை அமைச்சகம் கொள்கை ரீதியில் ஏற்றுக் கொண்ட பின்பு, தற்போது 1987 ஆம் ஆண்டு வனத் துறை அரசாணையை காட்டி வனத் துறை அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனா்.
சாக்குளத்துமெட்டுச் சாலை அமைப்பதால் ஏலக்காய் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள் பயனடைவதுடன் வனப் பகுதியில் சமூக விரோதச் செயல்கள், விதிமீறல்கள் தடுக்கப்படும். இது தீ தடுப்புச் சாலையாகவும் அமையும். சாக்குளத்துமெட்டுச் சாலைத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்!

மூவர் அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 3-வது வெற்றி!

ஜன நாயகன் விவகாரம்: தணிக்கை வாரியம் விளக்கம்!

லால்குடி அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ. 6,000 கோடி: உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


