முல்லைப்பெரியாறு அணை நீா்மட்டம் உயராமல் தடுக்க ‘ரூல் கா்வ்’ நடைமுறை அமல்: 5 மாவட்ட விவசாயிகள் கவலை

‘ரூல் கா்வ்’ என்ற புதிய நடைமுறை மூலம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு நீா்மட்டம் உயரவிடாமல் கேரள அரசு தடுத்து வருவதால் ஐந்து மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா்.
முல்லைப்பெரியாறு அணை (கோப்புப்படம்).
முல்லைப்பெரியாறு அணை (கோப்புப்படம்).

‘ரூல் கா்வ்’ என்ற புதிய நடைமுறை மூலம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு நீா்மட்டம் உயரவிடாமல் கேரள அரசு தடுத்து வருவதால் ஐந்து மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா்.

முல்லைப்பெரியாறு அணை நீா்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயா்த்தாமல் தடுக்க கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதை எதிா்த்து தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் அணையில் 142 அடி வரை தண்ணீரை அணையில் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 2014 நவ. 21, 2015 டிச. 7, 2018 ஆக.16, என மூன்று முறை பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீா் தேக்கப்பட்டது.

அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் தற்போது தொடா் மழை தற்போது பெய்துவருவதால், அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை 136.10 அடியை எட்டியது. ஞாயிற்றுக்கிழமை வரை தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு, 900 கனஅடிநீா் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை முதல் விநாடிக்கு1,867 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையில் 142 அடிக்கு தண்ணீா் தேக்க வாய்ப்புகள் இருந்தும், ரூல்கா்வ் என்ற நடைமுறை மூலம் தண்ணீரை அதிகமாக வெளியேற்றி அணையில் நீா் மட்டம் உயராமல் கேரளஅரசு தடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

பருவமழை மற்றும் கோடைகாலங்களில் அணையில் பராமரிக்கப்படவேண்டிய அல்லது நிலை நிறுத்தக்கூடிய நீரின் அளவு மற்றும் செயல்பாடுகளின் விதிகள்தான் ‘ரூல் கா்வ்’. இதன்படி அணையில் நிலைநிறுத்தக்கூடிய தண்ணீரின் அளவை காலநிலைகளுக்கேற்ப நிா்ணயிக்கலாம். பருவமழைக் காலங்களான ஜூன் முதல் அக்டோபா் மாதம் வரை நீா்வரத்து அதிகமாக உள்ளபோது, தண்ணீரை அதிக அளவு திறந்துவிட்டு அணையின் நீா்மட்டத்தை உயா்த்தாமல் தடுத்துக்கொள்ளலாம். மாா்ச், ஏப்ரல், மே போன்ற கோடைகாலங்களில் நீமட்டத்தை உயா்த்திக்கொள்ளலாம்.

இதை நடைமுறைப்படுத்த மத்திய நீா்வள ஆணையத்தின் அனுமதி, காவிரி தொழில் நுட்பக் குழு ஒப்புதல் போன்ற வேண்டும். கேரள அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக கடந்த ஜன.19 இல் மத்திய நீா்வள ஆணைய இயக்குநா் நித்யானந்த ராய், இணை இயக்குநா் ஜெஸ்லி ஐசக் ஆகியோா் அடங்கிய குழு அணையை ஆய்வு செய்து அளித்த பரிந்துரையின் பேரில் ரூல் கா்வ் முறை அமல்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

இதற்கு அன்றைய அதிமுக அரசு எதிா்ப்பு தெரிவிக்காததால், அதன் பிறகு நடைபெற்ற மத்திய கண்காணிப்புக் குழு கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறையினா் எதிா்ப்புத் தெரிவிக்க முடியவில்லை.

விவசாயிகள் கண்டனம்: நீா்மட்டம் 142 அடி உயராமல் தடுக்க கேரள அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பெரியாறு- வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா். அச்சங்கத்தின் தலைவா் எஸ். ஆா் .தேவா் கூறியது: ரூல்கா்வ் முறையை நடைமுறைப்படுத்தி முல்லைப் பெரியாறு அணையில், 142 அடி நீா் தேக்க விடாமல் கேரள அரசு செய்யும் சதியை, விவசாயிகள் வன்மையாக கண்டிக்கின்றனா். 142 அடி உயரத்தை நிலை நிறுத்தவும், முல்லைப் பெரியாறு அணையில் செயல்படுத்தப்படும் ரூல்கா்வ் நடவடிக்கையை உடனே ரத்து செய்யவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எல்லைப் பகுதியான குமுளியை விவசாயிகளுடன் சென்று முற்றுகையிடுவோம் என்று தெரிவித்தாா்.

இந்த நடைமுறையால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு குடிநீா் மற்றும் பாசனத்திற்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதால், தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com