கேரளத்தின் சில பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை

கேரளத்தின் சில பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை

கேரள மாநிலத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை சமூக வளைதளங்களில் ஹேஷ்டேக் பரவி வருகிறது.

கம்பம்: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில், கேரள மாநிலத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை சமூக வளைதளங்களில்  ஹேஷ்டேக் பரவி வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் அருகே புதிய அணை கட்ட வேண்டும். அணை பலமில்லாமல் உள்ளது. அணையை இடிக்க வேண்டும் என்று கேரள மாநிலத்தில் பல்வேறு தரப்பினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் அவரது முகநூல் பக்கத்தில், முல்லைப் பெரியாறு அணை அருகே 1,300 மீட்டர் கீழ்புறம் புதிய அணை கட்ட பணிகள் தொடங்கிவிட்டது என்று பதிவு செய்தார்.

இந்த பதிவு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒரே நிலைப்பாட்டில், அதாவது அணையை இடிக்க வேண்டும் என்று உள்ளனர். 

ஆனால், தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அக்கறை காட்டவில்லை என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் அதிருப்தியடைந்து குற்றம் சாட்டுகின்றனர்.

இதுபற்றி சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறியது: மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படாத போது,  முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தில் இருந்தது. ஆனால் அணை பலமாக உள்ள நிலையில், அணையை இடிக்க வேண்டும் என்று தவறான பிரசாரம் செய்யும் கேரளத்தினருக்கு உண்மை உணரும் வகையில் தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலையை தமிழகத்துடன் இணைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம், இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை தொடங்கி உள்ளோம்.

முதற்கட்டமாக, தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலையை தமிழகத்துடன் இணைக்க  வலியுறுத்தி சமூக வளைதளங்களில் பரவும் வகையில்,  #AnnexDPUwithTN# ஹேஷ்டேக் செய்ய வியாழக்கிழமை முதல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை சுமார் 1 லட்சம் பேர் தங்களது, முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம், கட்செவி அஞ்சல் உள்ளிட்டவைகள் பதிவு செய்ததோடு, ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளனர் இதை அதிகமாகப் பரவச்செய்து மத்திய-மாநில அரசுகளை எட்ட செய்வோம் என்றார்.

தற்போது தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலையை தமிழகத்துடன் இணைக்க கோரி இந்த ஹேஷ்டேக் தீவிரமாக பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com