கம்பத்தில் காவல் நிலைய கட்டடம் இல்லாமல் அவதிப்படும் போக்குவரத்து காவல்துறையினர்

தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் இல்லாமல்,   போக்குவரத்து  காவல்துறையினர் பணியின் போது மன உளைச்சல் மற்றும் அவதியடைந்து வருகின்றனர்.
கம்பத்தில் காவல் நிலைய கட்டடம் இல்லாமல் அவதிப்படும் போக்குவரத்து காவல்துறையினர்
Published on
Updated on
1 min read

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் இல்லாமல்,   போக்குவரத்து  காவல்துறையினர் பணியின் போது மன உளைச்சல் மற்றும் அவதியடைந்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல்துறை துணைக்கோட்டத்திற்கு கம்பத்தை தலைமையாகக் கொண்டு போக்குவரத்து காவல் நிலையம் செயல்படுகிறது.

போக்குவரத்து காவல் நிலையத்திற்கு ஒரு ஆய்வாளர்,  ஒரு சார்பு ஆய்வாளர்,  சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் 8  பேர் மற்றும் முதல் நிலை இரண்டாம் நிலை காவலர்கள் 5 பேர் என மொத்தம் 15 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களது பணி தமிழக கேரள எல்லையில் உள்ள லோயர் கேம்ப் மற்றும் குமுளி மலைச் சாலைகள்,  கோம்பை மற்றும் சின்னமனூர் வரை  பணியாற்றும் எல்லையாக உள்ளது.

போக்குவரத்து நெரிசல்,  சாலையோர விபத்துக்கள்,  முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது போக்குவரத்தை ஒழுங்கு செய்வது, மாற்றுப்பாதையில் அனுப்பி நெருக்கடி இல்லாமல் பார்த்துக்கொள்வது,  மேலும் வாகன தணிக்கை உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

உத்தமபாளையம் காவல்துறை துணைக் கோட்டத்தை பொறுத்தளவில் சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்கள்  சொந்த கட்டடங்களில் அமைக்கப்பட்டு  அனைத்து காவல் நிலையங்களும் இயங்கி வருகின்றன.

ஆனால் கம்பத்தில் உள்ள போக்குவரத்து காவல் நிலையம் மட்டும்  இதுவரை சொந்த கட்டடத்தில் செயல்படாமல்,  கம்பம் வடக்கு காவல் நிலைய மாடியில், அதுவும் இதர பணியில் இருக்கும் காவலர்கள் ஓய்வெடுக்கும் அறையில்  இடைஞ்சலக அலுவலகத்தை அமைத்து,  நிலைய எழுத்தர், நீதிமன்ற காவலர், கணிப்பொறி இயக்குனர் என்று அதே அறையில் காவலர்கள் நெருக்கடியில்  பணியாற்றி வருகின்றனர். காவல் ஆய்வாளருக்கு என்று தனி அறை கிடையாது, அவர் பயன்படுத்தும் வாகனத்திற்கு நிறுத்தும் இடம் கூட இல்லை. 

இந்நிலையில் தற்போது உள்ள காவல் ஆய்வாளர், விரைவில் டிஎஸ்பியாக பணி உயர்வு பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்தனர். போக்குவரத்து காவல்துறையினர் நெடுஞ்சாலையில் நிற்பதால் சட்ட ஒழுங்கு காவல்துறையினரை விட இவர்களுக்குக் தான் மன அழுத்தம் அதிகம்.

சாலையில் செல்லும் வாகனங்களின்,  மாசுபட்ட காற்று, காற்று ஒலிப்பான்களின் சத்தம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு போதுமான விடுமுறை  கிடையாது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த வார விடுமுறையும் கிடையாது. இவ்வளவு கடுமையான பணிச்சுமையில் காவல் நிலையம் செல்லலாம் என்றால் அங்கு அமர கூட இருக்கைகள் இல்லை. இதனால் இவர்கள் ஓய்வுக்காக செல்லும்போது வாகன விபத்துகளிலும் சிக்குகின்றனர்.

இதற்கு ஒரே தீர்வு காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் ஏற்படுத்தி  இயங்குவது. புதிய காவல் நிலையம் அமையும் வரை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றி செயல்பட வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறையினர் எதிர்பார்க்கின்றனர். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com