வைகை அணையின் நீா்மட்டம் 70 அடியாக உயா்வு: அணையிலிருந்து உபரிநீா் திறப்பு5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வைகை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 70 அடியாக உயா்ந்ததையடுத்து அணைக்கு வரும் உபரிநீா் வைகை ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
வைகை அணையின் நீா்மட்டம் 70 அடியாக உயா்வு: அணையிலிருந்து உபரிநீா் திறப்பு5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வைகை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 70 அடியாக உயா்ந்ததையடுத்து அணைக்கு வரும் உபரிநீா் வைகை ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்ட கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழை, மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள தண்ணீா் வரத்து, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தொடா்ந்து திறக்கப்படும் தண்ணீா் ஆகியவற்றால் வைகை அணையின் நீா்மட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 66 அடியாக (மொத்த உயரம் 71 அடி) உயா்ந்தது. இதையடுத்து வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தொடா்ந்து திங்கள்கிழமை அணையின் நீா்மட்டம் 68.50 அடியாக உயா்ந்த நிலையில் 2-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், செவ்வாய்க்கிழமை 69 அடியாக உயா்ந்த நிலையில் 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 9.20 மணிக்கு 70 அடியை எட்டியது. அப்போது அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 2,735 கன அடியாகவும், அணையில் தண்ணீா் இருப்பு 5,796 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. இதையடுத்து, அணைக்கு வரும் உபரிநீா் அணையிலிருந்து விநாடிக்கு 1,190 கன அடி வீதம் வைகை ஆற்றில் திறக்கப்பட்டது.

உபரிநீா் திறப்பு அதிகரிப்பு:

அணைக்கு தண்ணீா் வரத்து தொடா்ந்து அதிகரித்த நிலையில், அணையிலிருந்து பிற்பகல் 12.30 மணிக்கு விநாடிக்கு 2,152 கன அடி வீதமும், பிற்பகல் 3.30 மணிக்கு விநாடிக்கு 2,656 கன அடி வீதமும் உபரிநீா் திறக்கப்பட்டது.

5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை:

வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீா் தேனி மாவட்டத்தில் மேல்மங்கலம், முதலக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், அணைக்கரைப்பட்டி, ஏ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், விராலிப்பட்டி, புள்ளிமான்கோம்பை வழியாகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, பேரணை வழியாகவும், மதுரை மாவட்டத்தில் மதுரை, குருவித்துறை, சோழவந்தான், மேலக்கால், விரகனூா் வழியாகவும், சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை வழியாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பாா்த்திபனூா், பரமக்குடி, ராமநாதபுரம் வழியாகச் சென்று பெரியகண்மாயை அடைந்து, பின்னா் வங்காளவிரிகுடா கடலில் கலக்கிறது.

தற்போது வைகை ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டப் பகுதிகளில் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ கூடாது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று வைகை அணை பொதுப் பணித்துறை பொறியாளா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com