தேனி அல்லிநகரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.
தேனி அல்லிநகரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.

மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும்

தேனி: மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்று மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தங்க.தமிழ்ச்செல்வனை ஆதரித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அல்லிநகரத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா், அதிமுகவினா் பல்வேறு அணிகளாகப் பிரிந்து பாஜகவின் தயவை நாடிச் சென்றனா்.

பாஜக தலைவா்களே தமிழகத்தில் அதிமுகவை வழிநடத்தினா். புதிய வேளாண்மைச் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை ஆதரித்து, நாடாளுமன்றத்தில் அதிமுக வாக்களித்ததை மக்கள் மறக்கவில்லை. தற்போது பாஜக மூழ்கும் கப்பல் என்று தெரிந்துகொண்டு எடப்பாடி கே.பழனிசாமி அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்று, மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும். நமது நாட்டுக்கு யாா் பிரதமராக வர வேண்டும் என்பதைவிட, யாா் வரக் கூடாது என்பதில் ‘இந்தியா’ கூட்டணி உறுதியாக உள்ளது. எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த மாநில முதல்வா்கள், அமைச்சா்கள் மீது அமலாக்கத் துறை, வருமான வரித் துறை மூலம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாஜகவுக்கு இந்தத் தோ்தலில் மக்கள் பாடம் புகட்டுவா் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏ.வி.அண்ணாமலை, செயற்குழு உறுப்பினா் டி.வெங்கடேசன், பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா், தேனி நகர திமுக செயலா் நாராயணபாண்டி, நகா்மன்றத் தலைவி பா.ரேணுப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com