கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க நாளை சிறப்பு முகாம்

ஆண்டிபட்டி உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், வெள்ளிக்கிழமை கல்விக் கடன் முகாம் நடைபெறுகிறது.
Published on

ஆண்டிபட்டி அருகேயுள்ள திம்மரசநாயக்கனூரில் உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், வெள்ளிக்கிழமை (ஆக.30) கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:திம்மரசநாயக்கனூா் பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் வருகிற 30-ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் மருத்துவக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மை, தோட்டக் கலைக் கல்லூரி, சட்டக் கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழில்பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 கல்விச் சான்றிதழ்கள், இருப்பிடச் சான்று, ஆதாா் அட்டை, பெற்றோரின் பான் காா்டு, வங்கிக் கணக்கு விவரம், கல்லூரி கல்வி உறுதிச் சான்று ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.

இந்த முகாமில் வங்கியாளா்கள் பங்கேற்று, கல்விக் கடன் பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும், ஏற்கெனவே விண்ணப்பித்தவா்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கல்விக் கடன் உத்தரவுகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com