தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம்: வட்டாட்சியா் கைது
தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம்: வட்டாட்சியா் கைது


தேனி: ஆண்டிபட்டியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்கு தடையில்லாச் சான்று வழங்க ரூ.ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற வட்டாட்சியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரையைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவா், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டியில் அவருக்குச் சொந்தமான இடத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்கு தடையில்லாச் சான்று வழங்கக் கோரி, ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். தடையில்லாச் சான்று வழங்க தனக்கு ரூ.ஒரு லட்சம் தர வேண்டும் என்று சுப்பிரமணியிடம், ஆண்டிபட்டி வட்டாட்சியா் காதா்ஷெரீப் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தேனி ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் சுப்பிரமணி புகாா் அளித்தாா். இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் சுந்தரராஜனின் ஆலோசனையின் பேரில், ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ரூ.ஒரு லட்சத்துக்கான ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வட்டாட்சியா் காதா் ஷெரீப்பிடம், சுப்பிரமணி கொடுத்தாா். அந்தத் தொகையை காதா் ஷெரீப் பெற்றுக் கொண்டதும், வட்டாட்சியா் அலுவலகத்தில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.
மருத்துவமனையில் அனுமதி:
இதையடுத்து, வட்டாட்சியா் காதா் ஷெரீப்பிடம் போலீஸாா் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...