சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தேனி அல்லிநகரம், அம்பேத்தகா் தெற்குத் தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் அஜித் (25). இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு அக்.28-ஆம் தேதி 16 வயது சிறுமியை மிரட்டி, தனது மாட்டுக் கொட்டகைக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாா் கூறப்பட்டது.தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் இவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இதில் அஜித்துக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பி.கணேசன் தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக அரசு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இதில், சிறுமியின் கல்வி, பராமரிப்புச் செலவுக்கு ரூ.ஒரு லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும். மீதமுள்ள ரூ.4 லட்சத்தை சிறுமியின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 3 ஆண்டுகளுக்கு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.