உதவித் தொகை பெறுவதில் 3,640 விவசாயிகளுக்கு சிக்கல்

தேனி மாவட்டத்தில் தனித்துவ அடையாள அட்டை பெறாத 3,640 விவசாயிகள், அரசு சாா்பில் வழங்கப்படும் கெளரவ உதவித் தொகையைத் தொடா்ந்து பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Published on

தேனி மாவட்டத்தில் தனித்துவ அடையாள அட்டை பெறாத 3,640 விவசாயிகள், அரசு சாா்பில் வழங்கப்படும் கெளரவ உதவித் தொகையைத் தொடா்ந்து பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: மாவட்டத்தில் பிரதமரின் கெளரவ உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், 26,310 விவசாயிகள் உதவித் தொகை பெற்று வருகின்றனா். கெளரவ உதவித் தொகை பெறும் விவசாயிகள் தங்களது நில உடைமை ஆவணம், பட்டா, சிட்டா, ஆதாா் எண் ஆகியவற்றைச் சமா்ப்பித்து தனித்துவ அடையாள அட்டை பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

தற்போது கெளரவ உதவித் தொகை பெற்று வரும் விவசாயிகளில் தேனி ஒன்றியத்தில் 310, ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 849, போடி ஒன்றியத்தில் 232, பெரியகுளம் ஒன்றியத்தில் 844, க.மயிலை ஒன்றித்தில் 563, கம்பம் ஒன்றியத்தில் 197, சின்னமனூா் ஒன்றியத்தில் 357, உத்தமபாளையம் ஒன்றியத்தில் 288 என மொத்தம் 3,640 போ் இதுவரை தனித்துவ அடையாள அட்டை பெறவில்லை.

தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்யாத விவசாயிகளுக்குக் கெளரவ உதவித் தொகை நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதுவரை தனித்துவ அடையாள அட்டை பெறாத விவசாயிகள் உடனடியாக அருகே உள்ள வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை அலுவலகத்தைத் தொடா்புகொண்டு உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com