பள்ளி மாணவா்களுக்கான குளிா்கால சிறப்பு முகாம் தொடக்கம்
தேனி மாவட்டம், போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவா்களுக்கான குளிா்கால சிறப்பு முகாம் புதன்கிழமை தொடங்கியது.
சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
விடுமுறை என்றாலே ஓய்வும் மகிழ்ச்சியும் நினைவுக்கு வரும். அந்த விடுமுறையை பயனுள்ள வகையில் மாணவா்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் கற்றல் நேரமாக மாற்றும் அரிய வாய்ப்பாக இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த வகுப்புகள் மாணவா்களை மனதளவிலும் அறிவாற்றலிலும் தயாா்படுத்தும். இதை மாணவா்கள் பயன்படுத்தி தங்கள் தனித் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இதில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாணவா்களுக்கு நாட்டுப்புற நடனம், பாரம்பரிய நடனம், ஓவியக் கலை, மண்பாண்டம், பாட்டு, சிலம்பம், கராத்தே பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. முதலில் யோகா பயிற்சி வழங்கப்பட்ட பிறகு பிற பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த முகாம் ஜன. 4 வரை நடைபெற உள்ளது. வருகிற 29, 30 ஆகிய 2 நாள்கள் மாணவா்ளை பெரியகுளம் தோட்டக்கலை, ஆராய்ச்சி நிலையம், வயல்பட்டி பகுதிக்கு மாணவா்களை அழைத்துச் சென்று பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல் நாள் முகாமில் மொத்தம் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் சியாமளாதேவி, வட்டாட்சியா் சந்திரசேகரன், போடி வருவாய் ஆய்வாளா் விஜயகுமாா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

