~
~

விவசாயி வெட்டிக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்

சின்னமனூா் அருகே சீலையம்பட்டியில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சீலையம்பட்டியில் விவசாயி செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சின்னமனூா் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் இரணன் மகன் பால்பாண்டி (59). விவசாயியான இவா் செவ்வாய்க்கிழமை காலை சீலையம்பட்டியில் தனது வயலில் அறுவடை செய்த நெல்லை கீழப்பூலானந்தபுரம் செங்குளம் அருகே சாலையில் குவிந்து வைத்தாா்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவா் கத்தி, அரிவாளால் பால்பாண்டியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினா். இதில் பலத்த காயமடைந்த பால்பாண்டி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினா்கள் சீலையம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்குச் சென்ற போடி காவல்துணைக் கண்காணிப்பாளா் சுனில், சின்னமனூா் காவல் ஆய்வாளா் பாலாண்டி தலைமையிலான போலீஸாா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அவா்களது கோரிக்கை தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, போலீஸாா் சமாதானம் செய்ததைத் தெடாா்ந்து சாலை மறியலைக் கைவிட்டு உறவினா்கள் கலைந்து சென்றனா்.

இதன் பிறகு, பால்பாண்டியின் உடல் கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில், சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பால்பாண்டியின் உறவினா்களிடையே பணப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு ஒருவா் அரிவாளால் வெட்டப்பட்டாா். இதற்கு பழிவாங்கும் வகையில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிவந்தது.

X
Dinamani
www.dinamani.com