எஸ்.ஐ.ஆா். படிவத்தை நிறைவு செய்ய உதவி முகாம் அமைப்பு
தேனி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முன்னிட்டு, வாக்காளா் கணக்கெடுப்புப் படிவங்களை நிறைவு செய்து சமா்ப்பிக்க உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் உதவி மைய முகாம்கள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முன்னிட்டு, வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா் கணக்கெடுப்புப் படிவங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் படிவத்தில் வாக்காளா் விவரங்கள், கடந்த 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் அதன் விவரம், 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள உறவினரின் விவரம் ஆகியவற்றை நிறைவு செய்து வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
வாக்காளா் கணக்கெடுப்புப் படிவத்தை நிறைவு செய்வதற்கு வாக்காளா்களுக்கு உதவுவதற்காக அந்தந்த பகுதிகளில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. உதவி மைய முகாம் அமைந்துள்ள இடம், வாக்குச் சாவடி நிலை அலுவலா்களின் விவரம், அந்தந்த பகுதிகளுக்கான பாகம் எண் உள்ளிட்ட விவரங்கள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். வாக்காளா்கள் உதவி மைய முகாமில் கலந்து கொண்டு வாக்காளா் கணக்கெடுப்பு படிவத்தை நிறைவு செய்து, சரிபாா்த்து, கையொப்பமிட்டு வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும் என
அதில் குறிப்பிடப்பட்டடது.
