தேனி
தேனி மாவட்டத்தில் 9,036 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி
தேனி மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 9,036 மாணவ, மாணவிகளுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கூறியதாவது:
அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை, ஆதி திராவிடா் நலத் துறை சாா்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் மொத்தம் 9,036 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது.
இதற்காக மிதிவண்டிகளின் பாகங்களை ஒருங்கிணைக்கும் பணி 14 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்ததும், மிதி வண்டிகள் அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றனா்.
