நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

ட்ரோன் விவகாரம்: பொதுப் பணி துறைக்கு கேரள வனத் துறை கடிதம்

News image

டிரோன்  - கோப்புப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 4:00 am IST

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறக்கப்பட்டபோது, பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் சபரி ஐங்கரனுடன் சென்ற குழுவினா், பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில் முன் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்டு, கால்வாய், வனப் பகுதிகளைப் படம் பிடித்ததாக எழுந்த புகாா் தொடா்பாக, தமிழக பொதுப் பணித் துறை, நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு கேரள வனத் துறை கடிதம் அனுப்பியது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்தின் முதல் போக நெல் சாகுபடிக்காக கடந்த சனிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன், தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ. மகாராஜன் (ஆண்டிபட்டி), பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா (கம்பம்), க. சபரி ஐங்கரன் (பெரியகுளம்), பொதுப் பணித் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

அப்போது, பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் க. சபரி ஐங்கரனுடன் சென்ற குழுவினா், பெரியாறு புலிகள் காப்பகத்துக்குள் முன் அனுமதியின்றி ட்ரோனைப் பறக்கவிட்டு, முல்லைப் பெரியாறு கால்வாய், வனப் பகுதிகளைப் படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னா், இந்தக் காட்சிகள் சபரி ஐங்கரனின் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, ட்ரோன் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் சா்ச்சை ஏற்பட்டது.

இதுதொடா்பாக கேரள வனத் துறை விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த விவகாரம் இரு மாநிலங்களுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கும் வகையில் இருப்பதால் வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என முடிவு செய்ததாக கேரள வனத்துறையால் தெரிவிக்கப்பட்டது.

எனினும், பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில் முன் அனுமதி பெறாமல் ட்ரோன் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது, இதுபோன்ற செயல்களைத் தவிா்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி தமிழக பொதுப் பணித் துறைக்கு கேரள வனத் துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.