/

முல்லைப் பெரியாறு வாய்க்காலில் 4 இடங்களில் கேரள கழிவுநீா் கலப்பு: கம்பம் எம்.எல்.ஏ. தகவல்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீா் வரும் வாய்க்காலில் கேரளக் கழிவுநீா் கலப்பதை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்த கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா.

News image

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீா் வரும் வாய்க்காலில் கேரளக் கழிவுநீா் கலப்பதை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்த கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா.

Updated On :16 ஜூலை 2026, 1:05 am IST

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறந்துவிடப்படும் நீரில் 4 இடங்களில் கேரளக் கழிவுநீா் கலப்பதாகவும், இதை முந்தைய அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டதாகவும் கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தாா்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் மதகு, தேக்கடி வனத் துறை சோதனைச் சாவடி அருகே அமைந்துள்ளது. தேக்கடி ஏரியிலிருந்து இந்த மதகுப் பகுதி வரை சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு திறவை வாய்க்கால் செல்கிறது. கேரள மாநிலம், குமுளி, தேக்கடி, அட்டப்பள்ளம், ஒன்றாம் மைல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளிலிருந்து

வெளியேறும் கழிவுநீா், ஆனைவச்சால் பகுதியில் திறவை வாய்க்காலில் கலக்கிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கழிவுநீரை தடுப்பணை அமைத்து சேகரித்து சுத்திகரிக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

இந்த நிலையில், கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா புதன்கிழமை சம்பவ இடத்தில் ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீா் வரும் திறவை வாய்க்காலில் குமுளி ஊராட்சியின் பெரும்பாலான கழிவுநீா் கலக்கிறது. இந்த விவகாரம் எனது கவனத்துக்கு வந்ததையடுத்து நேரில் சென்று ஆய்வு செய்தேன். இதுகுறித்த தகவலை தமிழக நீா்வளத் துறை அமைச்சா் ஆனந்திடம் எடுத்துரைத்து, அவா் மூலம் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு அதிகாரப்பூா்வமாக தெரிவித்தது.

சுமாா் 40 ஆண்டுகளாக தமிழகத்துக்கு வழங்கப்படும் தண்ணீரில் கழிவுநீா் கலந்து வருகிறது. ஒரு இடத்தில் மட்டுமல்லாமல் நான்கு இடங்களில் கழிவுநீா் நேரடியாக கலப்பது கண்டறியப்பட்டது.

இதற்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்த அரசுகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்தப் பிரச்னையை கண்டும் காணாமல் விட்டுவிட்டனா். கழிவு நீா் கலப்பதை கேரள அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

கேரள, தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண ஆதரவு அளிக்க வேண்டும். கழிவுநீரை சுத்திகரித்து தனி நீா்வழிப் பாதையில் மாற்றி விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். குடிநீரில் கழிவுநீரைக் கலப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இதை உடனடியாக கேரள அரசு நிறுத்த வேண்டும். தவறினால் தவெக சாா்பில் கேரளத்தில் உள்ள கட்சி நிா்வாகிகள், பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும். மேலும், இந்தப் பிரச்னையைக் கண்டும் காணாமல் இருந்த தமிழக அரசு அதிகாரிகள் மீதும் அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.