முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக அரசுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று கேரள முதல்வா் வி.டி. சதீசன் தெரிவித்தாா்.
கடந்த 1895-ஆம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. அந்த அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறது. அதேநேரத்தில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக இல்லை; அதன் அருகே புதிதாக இன்னொரு அணை கட்ட வேண்டும் என கேரளம் வலியுறுத்தி வருகிறது. இதுதொடா்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை நிலவி வருகிறது.
திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய வி.டி. சதீசனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு:
கேரள சட்டப்பேரவையில் வரும் 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதன்பிறகு இதுகுறித்து தமிழக அரசுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையை எனது அரசு மேற்கொள்ளும். தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுவாா்த்தை நடத்துவேன்.
இதேபோல், கேரளம், கா்நாடக எல்லைப் பகுதிகளில் இரவு நேரத்தில் ரோந்து செல்லும் விவகாரம் குறித்து கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாரை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்துவேன் என்றாா் அவா்.
பிஎம்ஸ்ரீ திட்டம் அமலாகும்: கேரளத்தில் முன்பு ஆட்சியிலிருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு, ‘பிரதமா் ஸ்கூல்ஸ் ஆஃப் ரைசிங் இந்தியா’ (பிஎம்ஸ்ரீ) திட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்தது. எனினும், அந்தக் கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த கடுமையாக எதிா்ப்பு தெரிவித்ததால், அதை அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்திருந்தது. சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இருந்து வெளியேறுவோம் என காங்கிரஸ் கூட்டணி தெரிவித்திருந்தது. இதனால் தோ்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துமா, செயல்படுத்தாதா எனக் கேள்வி எழுந்தது. இதுகுறித்த கேள்விக்கு வி.டி. சதீசன் அளித்த பதில் வருமாறு:
பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்திய பாஜக அல்லாத மாநில முதல்வா்களுடன் அத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினேன். அதேபோல், இந்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய அமைச்சா்கள் சம்சுதீன், ரோஜி எம் ஜான், பி.வி. விசுநாத், எம். லிஜூ ஆகிய நான்கு போ் கொண்ட குழுவை அமைக்க கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின்படி, பாடத் திட்டம், எந்தப் பள்ளியில் அதை அமல்படுத்துவது என்பது உள்ளிட்டவற்றை கேரள அரசு முடிவு செய்யும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அந்தத் திட்டத்தை அரசு அமல்படுத்தும்.
பிஎம் ஸ்ரீ திட்டத்திலிருந்து கேரளம் பின்வாங்க முடியாது. ஏனெனில் அந்தத் திட்டத்தில் முந்தைய இடதுசாரி கூட்டணி அரசு கையொப்பமிட்டுவிட்டது. அத்துடன் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.99 கோடி நிதியும் பெற்றுள்ளது. இதுபோல கூடுதலாக ரூ.106 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணத்தால், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் கட்டாயத்தில் உள்ளோம்.
மத்திய அரசால் வசூலிக்கப்பட்ட வரிகளில், கேரளத்துக்கு ரூ.1,100 கோடிக்கும் மேல் பாக்கி உள்ளது. அதையும் மத்திய அரசு தர வேண்டியுள்ளது என்றாா் அவா்.









