வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு

தேனியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 5 பேரிடம் மொத்தம் ரூ. 74 லட்சம் மோசடி செய்ததாக தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தி-மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய சண்முகசுந்தரம், அவரது மனைவி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

தேனியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 5 பேரிடம் மொத்தம் ரூ. 74 லட்சம் மோசடி செய்ததாக தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தி-மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய சண்முகசுந்தரம், அவரது மனைவி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சோ்ந்தவா் சாந்தி. பொறியியல் பட்டதாரியான இவரது மகன் சூரியநாராயணனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கடந்த 2021-ஆம் ஆண்டு தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தி-மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய மதுரை ஆரப்பாளையம் மணிநகரத்தைச் சோ்ந்த சண்முகசுந்தரம் கூறினாா். இதற்காக சாந்தி கடந்த 2021, செப்டம்பா் மாதம் முதல் நவம்பா் மாதம் வரை பல்வேறு தவணைகளில் சண்முகசுந்தரம், அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோரிடம் மொத்தம் ரூ. 50 லட்சம் கொடுத்தாா்.

இதேபோல, தேனியைச் சோ்ந்த செல்லத்தம்பி, பவித்ரா, பழனிக்குமாா், முத்துப்பாண்டி ஆகிய 4 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சண்முகசுந்தரம் மொத்தம் ரூ.24 லட்சம் பெற்ாகக் கூறப்படுகிறது.

ஆனால், சண்முகசுந்தரம் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் இருந்ததால், இதுகுறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சாந்தி புகாா் அளித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், சண்முகசுந்தரம், அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோா் மீது மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தற்போது சண்முகசுந்தரம் சேலம் அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் செய்தி-மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com