கம்பத்தில் சோளம் விளைச்சல் அமோகம்
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் மானாவாரி சோளம் விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையின் அடிவாரப்பகுதியான கூடலூா், கம்பம், உத்தமபாளையம், தேவாரம், ஓடைப்பட்டி, காமாட்சிபுரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு பருவமழைக் காலங்களில் சிறு தானியங்களான சோளம், கம்பு, பருப்பு வகைகளான துவரை, மொச்சை, உளுந்து, பாசிப்பயறு, எண்ணெய் வித்துகளான நிலக்கடலை, எள், நாட்டுக் காய்கறிகளான தக்காளி, வெண்டை, அவரை, கத்தரி உள்ளிட்டவை விளைவிக்கப்படுகின்றன. பருவமழைக் காலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இந்த வகை பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த வகையில் கம்பம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் பயிரிடப்பட்ட சோளம் விளைந்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. வடகிழக்குப் பருவமழை கை கொடுத்த நிலையில் சோளம் விளைச்சல் அமோகமாக
உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்தப் பகுதியில் கால்நடைகளுக்கு சோளத் தட்டை முக்கியத் தீவனமாக உள்ளது. இதில் கால்நடைகளுக்கு தேவையான நாா்ச் சத்து, புரதம், தாது உப்புக்கள் கிடைப்பதால் பாசு மாடுகள் அதிமாக பால் கொடுப்பதோடு, பாலில் கொழுப்புச்சத்து குறையாமல் இருக்க உதவுகிறது என்றாா் அவா்.

