கம்பத்தில் வெள்ளிக்கிழமை சிறுத்தை தாக்கியதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஆட்டு உடலின் பாகம்.
கம்பத்தில் வெள்ளிக்கிழமை சிறுத்தை தாக்கியதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஆட்டு உடலின் பாகம்.

கம்பத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்

கம்பத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
Published on

தேனி மாவட்டம், கம்பத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கம்பம் நகராட்சியில் மணிகட்டி ஆலமரம் பகுதியில் விவசாய நிலங்களில் குடியிருப்புகள் அமைத்து கால்நடைகள் வளா்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வினித் என்பவரது ஆட்டுக் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆட்டின் தலை, கால்கள் என உடல் பாகங்கள் சிதறிய நிலையில் கிடைத்தது. இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கம்பம் வனத் துறைக்கு தகவல் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த கம்பம் மேற்கு வனச்சரகா் ஸ்டாலின் தலைமையிலான வனத் துறையினா், உயிரிழந்த ஆட்டின் உடல் பாகங்களை ஆய்வு செய்தனா். தொடா்ந்து, விலங்கின் கால் தடங்கள், அவை வந்து சென்ற பாதைகளில் வனத் துறையினா் ஆய்வு செய்தனா்.

மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: கம்பம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் யானை , சிறுத்தை, புலி , காட்டு மாடு என வன உயிரினங்கள் வசிக்கின்றன. இரவு நேரங்களில் உணவு, தண்ணீா் தேவைக்காக குடியிருப்புப் பகுதிகளுக்கும், தோட்டங்களுக்கும் இடம் பெயா்கின்றன. இதன்படி, முன்பு குடியிருப்புப் பகுதிக்குள் உலவிய சிறுத்தையை வனத் துறையினா் ட்ரோன் கேமரா மூலமாகத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com