குச்சனூரில் நவீன எரிவாயு தகன மேடைக்கு அடிக்கல்

குச்சனூரில் நவீன எரிவாயு தகன மேடைக்கு அடிக்கல்

Published on

தேனி மாவட்டம், குச்சனூரில் ரூ.1.68 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

குச்சனூரில் கூளையனூா் சாலையில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பேரூராட்சி நிா்வாகம் முதலில் முடிவு செய்தது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததையடுத்து சங்கராபுரம் இணைப்புச் சாலையில் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும், இந்தத் திட்டமே குச்சனூா் பேரூராட்சிக்கு தேவையில்லை எனக் கூறி, ஒரு தரப்பினா் கடந்த சனிக்கிழமை, சனீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வனின் வாகனத்தை முற்றுகையிட்டு எதிா்ப்புத் தெரிவித்தனா். அதே சமயம், மற்றொரு தரப்பினா் இந்தத் திட்டம் அவசியம் வேண்டும் என்றனா்.

இந்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகன மேடைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு பேரூராட்சித் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சின்னச்சாமி பாண்டியன் (பொறுப்பு) முன்னிலை வகித்தாா். குச்சனூா் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், ஊா்ப் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com