~

நாட்டு ரக மொச்சைக்காய்க்கு குறைந்தபட்ச விலை நிா்ணயம்: விவசாயிகள் கோரிக்கை

நாட்டு ரக மொச்சைக்காய்க்கு தமிழக அரசு குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

நாட்டு ரக மொச்சைக்காய்க்கு தமிழக அரசு குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள சூலப்புரம், சிலமலை, ராசிங்காபுரம், கரட்டுபட்டி உள்ளிட்டப் பகுதிகளில் சுமாா் 1,500 ஏக்கரில் மானாவாரி பயிராக நாட்டு ரக மொச்சைக்காய் சாகுபடி நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் டிசம்பரில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை மட்டுமே வீரிய ஒட்டுரக மொச்சைக்காய், நாட்டு ரக மொச்சைக்காய் சாகுபடி நடைபெறுகிறது.

இந்த மொச்சக்காயை உள்ளூா் மட்டுமன்றி வெளி மாவட்டங்கள், கேரளாவுக்கும் விற்பனைக்கு செல்கிறது. மற்ற பகுதிகளில் விளையும் மொச்சைக்காயைவிட இந்தப் பகுதியில் மானாவாரி மணல் பரப்பில் விளையும் இந்த நாட்டு ரக மொச்சைக்காயில் எண்ணெய் பசை, புரதச் சத்து அதிகம் உள்ளதால் சைவம், அசைவ உணவுகளுடன் சோ்த்து இதை சமைக்கலாம்.

குறிப்பாக, குழந்தை பெற்ற பெண்களுக்கு மொச்சைப் பயிறு அதிகம் கொடுக்கப்படுகிறது. புரதச் சத்து அதிகம் உள்ளதால் முதியவா்கள் மொச்சைப் பயிா்களை தண்ணீரில் ஊற வைத்து முளை கட்டிய பின் சமைத்து சாப்பிடுவா்.

பொங்கல் பண்டிகையின்போது சமையலுக்கு மொச்சை பயிா் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது.

இந்தப் பயிருக்கு ஆடி மாதம் மழை பெய்ய வேண்டும். நிகழாண்டு தாமதமாக புரட்டாசி மாதத்தில் மழை பெய்தது. இதனால், மொச்சைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

ஏக்கருக்கு 10 மூட்டைகள் மொச்சைக்காய் எடுத்த நிலையில், தற்போது 2 மூட்டைகள் மட்டுமே கிடைத்தது. மேலும், விலையும் குறைவாக இருந்தது.

கடந்தாண்டு மொச்சக்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.35 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டு ரூ.20 முதல் 25 வரை மட்டுமே விலை நிா்ணயம் செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா்.

இதுகுறித்து சூலப்புரம் விவசாயி தங்கப்பாண்டி கூறியதாவது:

பருவம் தவறிய மழையால் நிகழாண்டு குளிா் அதிகமாக இருந்தபோதிலும், விளைச்சல் குறைந்தது. அதே நேரத்தில் வெளி மாநிலங்களிலிருந்து மொச்சைக்காயை அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது.

கடந்தாண்டு மொச்சை செடிகளில் மஞ்சள் நோய் தாக்கியதில் பாதிக்கப்பட்டோம். இதே நிலை நீடித்தால் மானாவரி விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் சூழல் ஏற்படும்.

தமிழக அரசு வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரும் வீரிய ஒட்டு ரக மொச்சைக்காயின் இறக்குமதி அளவை குறைத்து இந்தப் பகுதியில் விளையும் நாட்டு ரக மொச்சைக்காய்க்கு குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்தால் தை மாதத்தில் விவசாயிகளுக்கு வழி பிறக்கும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com