முன் மாதிரி விருது பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்
தேனி: தேனி மாவட்டத்தில் அரசு உதவியின்றி சுயமாக முன்னேறிய திருநங்கைகள் முன் மாதிரி விருது பெறுவதற்கு வரும் பிப்.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநங்கையா் தினத்தை முன்னிட்டு, வரும் ஏப்.15-ஆம் தேதி அரசு சாா்பில் திருநங்கையருக்கான முன் மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. அரசு உதவியின்றி சுயமாக வாழ்க்கையில் முன்னேறிய திருநங்கைகள், நல வாரியத்தில் உறுப்பினராக இல்லாத திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்த விண்ணப்பத்தை சுயவிவரக் குறிப்பு, 2 மாா்பளவு புகைப்படம், ஒரு பக்க அளவில் சுய சரிதை, விருதுகள் பெற்றிப்பின் அது குறித்த விவரம், சேவைகள் குறித்த விபரம், புகைப்படம், நாளிதழ் செய்தித் தொகுப்பு, பயனடைந்தோா் விவரம், காவல் நிலையத்தில் பெற்ற தடையில்லாச் சான்று ஆகியவற்றை இணைத்து இணையதளத்தில் வரும் பிப்.18-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்ப விவரங்கள் அடங்கிய கையேட்டினை 2 நகல்களாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் பிப்.19-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
