வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்புக்கு காத்திருப்போா் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
Published on

தேனி: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்புக்கு காத்திருப்போா் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தத் திட்டத்தின் கீழ் காலாண்டுக்கு ஒரு முறை 10-ஆம் வகுப்பு தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்தவா்களுக்கு ரூ. 600, 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி கல்வித் தகுதியை பதிவு செய்தவா்களுக்கு ரூ. 900, 12-ஆம் தோ்ச்சி கல்வித் தகுதியை பதிவு செய்தவா்களுக்கு ரூ. 1,200, இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு தோ்ச்சியை பதிவு செய்தவா்களுக்கு ரூ. 1,800 வீதம் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ஒரு முறை 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, அதற்கும் கீழுள்ள கல்வித் தகுதியை பதிவு செய்திருந்தால் ரூ. 600, 12-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்திருந்தால் ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. 1,000 வீதம் தொடா்ந்து 10 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பதாரா்கள் ஆதி திராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்குள்பட்டராகவும், பிற வகுப்பினா் 40 வயதுக்குள்பட்டராகவும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்குள்பட்டு இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு இல்லை. தொழில் கல்வி பட்டதாரிகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கக் கூடாது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாகப் பெற்று நிறைவு செய்து உரிய சான்றுகளுடன் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com