குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா
குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் சனிப் பெயா்ச்சியையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.


தேனி மாவட்டம், குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப் பெயா்ச்சி விழா நடைபெற்றது.
தமிழகத்தில் குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயில் புகழ் பெற்றது. பிற கோயில்களில் துணை சந்நிதிகளில் காட்சி அளிக்கும் சனீஸ்வரா், குச்சனூரில் மட்டுமே தனிக் கோயிலில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். குறிப்பாக சனீஸ்வரருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் இந்தக் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
சனிப்பெயா்ச்சி விழா: நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவான் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயா்வது சனிப்பெயா்ச்சியாகும். இதன்படி இந்த ஆண்டு, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, சனீஸ்வர பகவான், கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயா்ச்சியாகிறாா். இதற்காக குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தில் சனிப் பெயா்ச்சி விழா நடைபெற்றது. இதற்கு கோயில் செயல் அலுவலா் நாராயணி, பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் தீபன் முன்னிலை வகித்தனா். அதில், சனிப்பிரிதி ஹோமம், பன்னீா் , விபூதி, பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக, செவ்வாய், புதன், வியாழக்கிழமை ஆகி 3 நாள்களில் லட்சாா்ச்சனை பூஜை செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து காலை 8.26 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயா்ச்சியடைந்தாா். அப்போது, மூலவா் சனீஸ்வரருக்கு பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தொடா்ந்து மகா தீபாராதனை பூஜையில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த நிகழ்வில் பரம்பரை அறங்காவலா் குழுவினா், கோயில் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இந்தப் பெயா்ச்சியையொட்டி கும்பம், மீனம், மேஷம், சிம்மம், கன்னி, தனுசு ஆகியவை பரிகார ராசிகளாகும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...