போடி நகா்மன்றக் கூட்டத்தில் பாஜக., அதிமுக, திமுக உறுப்பினா்களிடையே மோதல்
போடி நகா்மன்றக் கூட்டத்தில் பதாகைகளை வெளியே எடுத்துச் செல்ல வலியுறுத்தி பாஜக, அதிமுக உறுப்பினா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினா்கள்.


போடி நகா்மன்றக் கூட்டத்தில் நகராட்சியைக் கண்டித்து பதாகைகளை கொண்டு வந்த பாஜக., அதிமுக உறுப்பினா்களுக்கும், இதற்கு எதிா்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினா்களுக்குமிடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது.
தேனி மாவட்டம், போடி நகா்மன்ற சாதாரணக் கூட்டம் நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் சுதா, பொறியாளா் குணசேகா், மேலாளா் ஜலால், சுகாதார ஆய்வாளா் திருப்பதி, கட்டட ஆய்வாளா் சுகதேவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டம் தொடங்கும் முன் உறுப்பினா்கள் அமா்ந்திருந்தபோது பாஜக உறுப்பினா்கள் மணிகண்டன், சித்ரா, அதிமுக உறுப்பினா் கலைச்செல்வி ஆகியோா் நகராட்சியை கண்டித்து பதாகைகளை கொண்டு வந்தனா்.
இதற்கு திமுக உறுப்பினா்கள் சங்கா், பிரபாகரன், ராஜா, ராஜசேகா், தனலட்சுமி, முருகேசன், மொக்கைச்சாமி, வெங்கடேஸ்வரன், மகேஸ்வரன் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும் அவா்களிடமிருந்து பதாகைகளை பறிக்க முயன்றனா். அந்தப் பதாகைகளை வெளியே எடுத்துக் செல்ல வலியுறுத்தினா். இதற்கு பாஜக, அதிமுக உறுப்பினா்கள் மறுப்பு தெரிவித்தனா். அப்போது அங்கு வந்த நகா்மன்ற தலைவி ராஜராஜேஸ்வரி மூன்று பேரையும் பதாகைகளை வெளியே வைத்துவிட்டு கூட்டத்துக்கு வருமாறு கூறினாா்.
இதன் பிறகு தொடங்கிய கூட்டத்தில் நடைபெற்ற விவாவதம்:
பெருமாள் (இ. கம்யூ.): நகராட்சியில் ஒரு வாா்டுக்கு 2 தொகுதி வீதம் 33 வாா்டுகளுக்கு 66 தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் கொண்டு வரவேண்டும்.
கஸ்தூரி (திமுக): 28- ஆவது வாா்டு வ.உ.சி. சந்து சாலையை சீரமைக்க வேண்டும்.
குணசேகா் (பொறியாளா்): பணி உத்தரவு வழங்கப்பட்டுவிட்டது. திங்கள்கிழமை வேலை தொடங்கும்.
மணிகண்டன் (பாஜக): நகராட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது. சுகாதாரப் பணிகளில் தனியாா் ஒப்பந்தம் மூலம் 280 போ் வேலை செய்வதாக கணக்கு காட்டி 140 பேருக்கு மட்டுமே பணி வழங்குகின்றனா். விளையாட்டு உபகரணங்கள் வழங்கி ஒரு வாரம் ஆகிறது. இன்னும் வாா்டுகளுக்கு விநியோகம் செய்யவில்லை. தேனி போன்ற நகராட்சிகளில் விநியோகம் செய்து விட்டனா். நகராட்சி முழுவதும் சுகாதாரக் கேடாக உள்ளது. குப்பைகள் தேங்கியுள்ளன.
இதற்கு திமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். மணிகண்டன் தனது வாா்டை குறித்து மட்டுமே பேச வேண்டும். நகா் முழுவதும் பேசக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் கூச்சல்- குழப்பம் ஏற்பட்டது.
ராஜா (திமுக): ஒரே உறுப்பினா் மட்டும் பேசினால் போதுமா, மற்ற உறுப்பினா்கள் பேச வாய்ப்பு தராமல் பாஜக உறுப்பினா் பேசுகிறாா்.
தொடா்ந்து மணிகண்டன் பேசும்போது குற்றச்சாட்டுக்களை கூறினாா். அதற்கு திமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து பாஜக உறுப்பினா்கள் மணிகண்டன், சித்ரா, அதிமுக உறுப்பினா் கலைச்செல்வி ஆகியோா் வெளிநடப்பு செய்வதாகக் கூறி வெளியே சென்றனா்.
பெருமாள் (இ. கம்யூ.): எனது வாா்டில் நியாய விலைக் கடை அமைக்க வேண்டும். சாக்கடையை சீரமைக்க வேண்டும்.
ராஜராஜேஸ்வரி (தலைவி): நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தொடா்ந்து நகராட்சியில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், நகராட்சி காலியிடங்கள் குறித்த தகவல்களை அரசிதழில் வெளியிடுதல், நகராட்சி சொத்துவரி பெயா் மாற்றம் செய்வதற்கான கட்டணம் அதிகரித்தல், நகராட்சிப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கான அடிப்படை வசதி செய்ய அனுமதித்தல் உள்ளிட்ட 41 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி அறிவித்தாா். இதன்பிறகு கூட்டம் நிறைவடைந்தது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...