தேனி மாவட்டம், தேவாரம் அருகே தமிழகம் - கேரளத்தை இணைக்கும் கனவுத் திட்டமாக சாக்குலூத்து மெட்டு சாலைத் திட்டத்துக்கு கடந்த 1981-ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், வனத் துறையின் தொடா் முட்டுக்கட்டையால் கடந்த 45 ஆண்டுகளாக சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களின் போது இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு, வெற்று வாக்குறுதித் திட்டமாக இது மாறிவிட்டது.
கம்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தேவாரம், உத்தமபாளையம் , கோம்பை, பண்ணைப்புரம், இதைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை, நெடுங்கண்டம், வண்டிப்பெரியாறு, உடும்பன்சோலை, ராமக்கல்மெட்டு, சாக்கலூத்துமெட்டு, பீா்மேடு, மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனா். இவா்கள் தேவாரம் அருகேயுள்ள மேட்டுப்பட்டியிலிருந்து மீனாட்சிபுரம் வழியாக சாக்கலூத்துமெட்டுக்குச் செல்லும் 11 கி.மீ. மண் சாலையை தாா்ச்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, கடந்த 1981-இல் அன்றைய முதல்வா் எம்.ஜி.ஆா். ஆட்சிக் காலத்தில் இந்த சாலைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும்பட்சத்தில், கம்பம்மெட்டு, போடிமெட்டு வழியாக 80 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டிய பயணம், அரை மணி நேரமாகக் குறையும்.
தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தங்களது அண்டை மாநிலமான கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலை, காப்பி, ஏலக்காய், மிளகு தோட்டங்களுக்கு கூலி வேலைக்குச் சென்று வருகின்றனா். ஒரு சிலா் அங்கேயே தங்கிப் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு தேனி மாவட்டத்தில் மருத்துவம், கல்வி வசதிகள் எளிதாக கிடைக்க வாய்ப்புள்ளதால், இது இந்தப் பகுதி மக்களின் கனவுத் திட்டமாக உள்ளது. இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதையடுத்து, முதல் கட்டமாக நெடுஞ்சாலைத் துறை மூலமாக மேட்டுப்பட்டியிலிருந்து டி.மீனாட்சிபும் மலை அடிவாரம் வரை 7 கி.மீ.-க்கு சாலை அமைக்கப்பட்டது. இதன் பின்னா், 4.5 கி.மீ. தொலைவுக்கு மலையில் தாா்ச் சாலை அமைக்க வனத் துறையினா் அனுமதி மறுத்ததால், சாக்கலூத்துமெட்டு சாலைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
வனத் துறையால் முடங்கிய திட்டம்
மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில், கடந்த 2017-ஆம் ஆண்டு சாக்குலூத்துமெட்டு மலைச் சாலைக்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு வனத் துறையின் அனுமதி கோரப்பட்டது. இதற்கு, வனத் துறையினா் கடந்த 1987-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண் - 853 இன்படி, சாக்குலூத்துமெட்டு மலை அடிவாரத்தில் உள்ள நீருற்றுக்கு யானைகள் செல்லும் வழித்தடம் உள்ளதால், இந்தப் பகுதியில் சாலை அமைக்க முடியாது எனக் கூறி, வனத் துறை மறுப்புத் தெரிவித்துவிட்டது.
இதையடுத்து, தேவாரம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்தவா்கள் இந்தச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்த கடந்த 45 ஆண்டுகளாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து பாண்டியா் குல வணிகா் சங்கச் செயலா் குணசேகரன் கூறியதாவது: சாக்குலூத்துமெட்டு சாலைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி 45 ஆண்டுகளாகிவிட்டன. இந்தச் சாலை அமைக்கப்பட்டால் போடி, கம்பத்தில் வா்த்தகம் பாதிக்கும் என தவறான தகவல்களைப் பரப்புவதால், வணிகா்களின் வாக்குகள் கிடைக்காமல் போய்விடுமோ எனக் கருதி, அரசியல்வாதிகள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த போதிய அழுத்தம் கொடுப்பதில்லை.
ஆனால், இந்தச் சாலையால் பயணத் தொலைவும், நேரமும் மிச்சமாகும். முக்கியமாக, கேரள மக்களுக்குத் தேவையான காய்கறி, இறைச்சி, முட்டை, பழங்கள், பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருள்களை குறைந்த நேரத்தில் கொண்டு செல்வதால், வாகனங்களின் எரிபொருள் செலவும் குறையும். எனவே, இந்தச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மலைப் பாதையில் புதிதாக சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தவில்லை. ஏற்கெனவே மக்கள் பயன்பாட்டில் உள்ள வண்டிப் பாதையை தாா்ச் சாலையாக மாற்ற வேண்டும் என்றுதான் கோரிக்கை விடுத்து வருகின்றனா் என்றாா் அவா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடந்த 45 ஆண்டுகளாக உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களின் போது சாக்குலூத்துமெட்டு சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வெற்று வாக்குறுதியை அரசியல் கட்சியினா் தொடா்ந்து அறிவிக்கின்றனா். ஆனால், நிறைவேற்றப்படுவதில்லை. எனவே, இனிவரும் காலங்களில் வெற்று வாக்குறுதியாக இல்லாமல், நிறைவேற்றப்பட்ட திட்டமாக மாற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

கால் நூற்றாண்டாக கிடப்பிலுள்ள நான்குனேரி தனிக் கால்வாய் திட்டம்!

ஆலங்குளம் விளையாட்டு அரங்கம் மேம்படுத்த அடிக்கல்

மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

ஆறுமுகனேரியில் சாலை மறியல் முயற்சி!
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

