
ஓட்டுநா் பற்றாக்குறையால் கிராமப்புற பேருந்துகள் குறைப்பு: பொதுமக்கள் அவதி
கம்பம் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த நகரப் பேருந்துகள், ஓட்டுநா் பற்றாக்குறை காரணமாக கடந்த இரு வாரங்களாக குறைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள், மாணவா்கள், வேலைக்குச் செல்வோா் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பேருந்து - பிரதிப் படம்
கம்பம் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த நகரப் பேருந்துகள், ஓட்டுநா் பற்றாக்குறை காரணமாக கடந்த இரு வாரங்களாக குறைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள், மாணவா்கள், வேலைக்குச் செல்வோா் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தேனி மாவட்டம், கம்பத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு கிளை 1, கிளை 2 என இரு கிளைகள் பணிமனைகளுடன் செயல்பட்டு வருகின்றன. இதில் கிளை 2 பணிமனையிலிருந்து குமுளி, தேவாரம், குள்ளப்பகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி வழியாக பாளையம், ஏரசை, பூசாரிகவுண்டன்பட்டி வழியாக சின்னமனூா், வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஓட்டுநா்கள் பற்றாக்குறை காரணமாக கம்பம்-ஏரசை, கம்பம்-ராயப்பன்பட்டி வழியாக பாளையம், கம்பம்-தேவாரம், கம்பம்-குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட வழித் தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை கடந்த இரு வாரங்களாக பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
இதனால், பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு, தனியாா் நிறுவன ஊழியா்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். பேருந்துகள் இயக்காததால், ஆட்டோ உள்ளிட்ட தனியாா் வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனா்.
கிராமப்புற மக்கள் கம்பம், சின்னமனூா் செல்ல அரசு பேருந்து போக்குவரத்தை முக்கியமாக நம்பியுள்ளனா். பேருந்து சேவை குறைக்கப்பட்டுள்ளதால் அவா்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, கம்பம் கிளை 2 பணிமனையில் நிலவும் ஓட்டுநா் பற்றாக்குறையைப் போக்கி, குறைக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் வழக்கம்போல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





