காரியாபட்டி அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் இல்லாமல், சிகிச்சைக்குவரும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.
காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு, உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து தினமும் உள் மற்றும் வெளி நோயாளிகளாக 400-க்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பெண்கள் மட்டும் சராசரியாக 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு பணியாற்றிய பெண் மருத்துவர், 6 மாதங்களுக்கு முன், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு புதிய பெண் மருத்துவர் நியமிக்கப்படவில்லை.
இதனால் அந்த இடம் இன்னும் காலியாகவே உள்ளது. பெண் மருத்துவர் இல்லாததால் சிகிச்சைக்குவரும் பெண்கள் சிரமப்படுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அருப்புக்கோட்டையிலிருந்து ஒரு பெண் மருத்துவர் வந்து செல்கிறார். அன்று மட்டும் பிரசவம் உள்ளிட்ட மற்ற சிகிச்சைக்காக பெண்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.
மற்ற தினங்களில் தங்களது பிரச்னைகளை ஆண் மருத்துவரிடமே கூறி சிகிச்சை பெறுகின்றனர். ஒரு சில பெண்கள், ஆண் மருத்துவர்களிடம் பிரச்னைகளை தெரிவிக்க சிரமப்படுகின்றனர்.
இதனால் காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு நிரந்தரமாக பெண் மருத்துவர் ஒருவரை உடனே நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.