மானாவாரி விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் மூலம் பயன்பெற அறிவுறுத்தல்

அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள், ராமலிங்காபுரம் கிராம விவசாயிகளின் பண்ணைகளில் வியாழக்கிழமை நேரடி களப்பணி மேற்கொண்டனர்.
Updated on
1 min read

அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள், ராமலிங்காபுரம் கிராம விவசாயிகளின் பண்ணைகளில் வியாழக்கிழமை நேரடி களப்பணி மேற்கொண்டனர்.
       அருப்புக்கோட்டை அருகே  கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தைச் சேர்ந்த  வேளாண் விஞ்ஞானிகள், மானாவாரி விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்துப் பயன்பெறுவது பற்றி செயல் விளக்கமளித்தனர்.
      குறிப்பாக, இப்பகுதி விவசாய நிலங்களில் அங்ககச் சத்து மிகக் குறைவாக இருப்பதால், ஆட்டெருது உரத்தினை தரையில் பரப்பி, அதில் காய்கறிக் கழிவுகள், காய்ந்த இலைகள் மற்றும் காகிதத் துண்டுகளையும் சேர்த்து சுமார் 3 மாதங்கள்வரை மக்கச் செய்து, பின்னர் மானாவாரி நிலத்தில் உரமாகப் பயன்படுத்தலாம். இந்த மக்கிய ஆட்டெருது உரத்தில்  கரிமக் கார்பன் மற்றும் தழைச்சத்தின் சமநிலை கிடைக்கிறது. மேலும், மக்கிய மாட்டுச் சாணத்தை விட அதிக தழைச்சத்தும் மணிச்சத்தும் கிடைப்பதால், மண் வளத்தை மேம்படுத்தி காற்றோட்டம், நீர்ப்பிடிப்புத் திறன், மண் நயம் கிடைத்து மகசூல் அதிகரிக்கிறது.
    மேலும், விவசாயிகள் தங்களின் வருமானத்தை அதிகரிக்க ஆடு, கோழி, முயல் பண்ணை உள்ளிட்டவை அமைத்து, அதிக லாபம் ஈட்டலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.    தொடர்ந்து, கால்நடை அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் குமார் விவசாயிகளிடையே விளக்கமளிக்கையில், விருதுநகர் மாவட்ட விவசாயிகள் கன்னி வெள்ளாடு, செம்மறி ஆடு போன்றவற்றை பரவலாக வளர்க்கின்றனர். 
    அவர்கள் சுபா புல், வேலிமசால் ஆகிய தீவனப் பயிர்களை வளர்த்து தங்கள் ஆடுகளுக்கு கொடுப்பதன் மூலம் 3 மாதங்களில் 15 கிலோ வரை ஆடுகளுக்குக் கூடுதல் எடை கிடைக்கிறது என்றார்.         பின்னர், திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, மேற்கூறப்பட்ட முறையில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட, கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் மையத்தில் உரிய பயிற்சிகளை விவசாயிகள் பெறலாம் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com