ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது அண்ணன் மகனை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகேயுள்ள மேலூர் துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி மாரியப்பன் ( 40). இவருக்கும், அவரது அண்ணன் கருப்பசாமிக்கும் (55) சொத்து தகராறு இருந்து வந்தது. செவ்வாய்க்கிழமை மாரியப்பனின் மகன் கருப்பையா, அந்தப் பகுதியில் நின்ற போது கருப்பசாமியின் மகன் செல்வம் (30) வந்து தகராறு செய்தார்.
இதனைத்தொடர்ந்து மாரியப்பன் அண்ணன் வீட்டுக்குச் சென்று, செல்வத்தை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு சித்தப்பா மாரியப்பனின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டினார். மாரியப்பன் வெளியே வந்ததும், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், செல்வம் சரமாரியாக வெட்டினார்.
இதனைத் தடுக்க முயன்ற மாரியப்பனின் மனைவி ராமலட்சுமியையும் அரிவாளால் வெட்டினார்.
காயமடைந்த நிலையில் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாரியப்பன் உயிரிழந்தார்.
பலத்த காயம் அடைந்த ராமலட்சுமி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக சேத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து புதன்கிழமை செல்வத்தை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









