ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

அடிப்படை வசதிகளின்றி திருச்சுழி தாலுகா: அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார்

திருச்சுழி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராமல் அதிகாரிகள் புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

திருச்சுழி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராமல் அதிகாரிகள் புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
 விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவில் 40 ஊராட்சிகள் உள்ளன. திருச்சுழியில் பிரசித்தி பெற்ற ரமணர் ஆலயம்  உள்ளது. இதனால் இங்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு பேருந்து நிலையம்  இல்லை, வெளியூர் பயணிகள் குளிப்பதற்கு, உடை மாற்ற அறைகள் கட்டப்பட்டும், அங்கு கழிப்பறை, மின்விசிறி இல்லாததால், கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. திருச்சுழி தனியார் கல்குவாரிக்கு கனரக வாகனங்கள் வந்து செல்வதால், திருச்சுழி-பார்த்திபனூர் சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. 
அதேபோல், திருச்சுழியில் துப்புரவு தொழிலாளர்கள் பற்றாக்குறையால், சுகாதாரப் பணிகள் முறையாக நடைபெறவில்லை. மேலும் 1, 2 ஆவது வார்டுகளில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது. ஆணைக்குளம் முதல் பி.புதுப்பட்டி வரையுள்ள குண்டாற்றில் சவடுமண் என்ற பெயரில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்  அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. கிருதுமால் நதி தூர் வாரப்படாமல் உள்ளது. 
மேலும், திருச்சுழி அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில்  மருத்துவர்கள் பணியில் இருப்பது கிடையாது, அவசர வாகன வசதியும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் வரும் கிராம நோயாளிகள் வெளியூர்களுக்குச் செல்லும் அவல  நிலை உள்ளது. திருச்சுழி, நரிக்குடி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஊராட்சிகளில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. பல ஊராட்சிகளில் இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை. அதேபோல், அதற்கான அடையாள அட்டையில் 2018 ஆம் ஆண்டிற்கான உள்தாள் ஒட்டப்படவில்லை.    மேலும், நரிக்குடியில் பேருந்து நிலையம் வெட்ட வெளியில் இயங்குகிறது. எனவே, மேற்கூரை, இருக்கை. கழிப்பறை வசதிகளுடன் கூடிய மற்றும் சிமென்ட் தளத்துடன் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழிப்பறைகள் பராமரிப்பின்றி உள்ளதால், இளம் தாய்மார்கள்  அவதிப்படுகின்றனர். குடிநீர்  வசதியும் கிடையாது. அதேபோல், திருச்சுழி ஒன்றியத்தில் பல்வேறு கிராமச் சாலைகள் பழுதடைந்துள்ளன. இதனால், கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். சிறுவனூர்  கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாததால், 3 கி.மீ தொலைவில் உள்ள அழகாபுரிக்கு சென்று மக்கள் நீர் எடுத்து வரும் நிலை உள்ளது. 
  மேலும், சிவகங்கை மாவட்ட எல்லைக்குள் உள்ள  வாகைக்குளத்தில் தெரு விளக்குகள் உள்ளன. ஆனால், சிறுவனூரில் தெரு விளக்குகள் கிடையாது. இதனால், இரவு  நேரத்தில் பெண்கள், குழந்தைகள் வெளியில் சென்று வர அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், பேருந்து வசதி இல்லாத காரணத்தால்  பள்ளி மாணவ, மாணவிகள் 5 கி.மீ தொலைவில் உள்ள பழையனூருக்கு நடந்து சென்று படித்து வரும் நிலையில் உள்ளனர். எனவே, அடிப்படை பிரச்னைகளை தீர்க்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.