திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் புலியருவியில் தடையை மீறி குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் பிரபு (35). கூலித் தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் செவ்வாய்க்கிழமை குற்றாலத்திற்கு வந்தார். குற்றாலத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு காரணாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. புலியருவியிலும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலையில் புலியருவிக்கு தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார் பிரபு. நண்பர்கள் குளித்து முடித்து அருவியிலிருந்து வெளியேறியபோது பிரபுவை காணவில்லை.
இதுகுறித்து குற்றாலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குற்றாலம் போலீஸார் மற்றும் தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர், புலியருவியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
வெள்ள நீரில் மூழ்கி இறந்த பிரபுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குற்றாலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.