விருதுநகருடன் அந்தியோதயா ரயில் திடீர் நிறுத்தம்: அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்

சென்னை தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற அந்தியோதயா ரயில் விருதுநகரில் புதன்கிழமை திடீரென நிறுத்தப்பட்டதால்
Published on
Updated on
1 min read

சென்னை தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற அந்தியோதயா ரயில் விருதுநகரில் புதன்கிழமை திடீரென நிறுத்தப்பட்டதால், பயணிகளுக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 சென்னை தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு தினசரி இயக்கப்படும் இந்த ரயிலில் முற்றிலும் முன் பதிவு இல்லாத பெட்டிகள் என்பதால் ஏராளமான பயணிகள் இதில் பயணம் செய்கின்றனர். 
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தாம்பரத்திலிருந்து புறப்பட்ட இந்த ரயிலில் ஏராளமானோர் திருநெல்வேலிக்கு செல்ல பயணச்சீட்டு எடுத்துள்ளனர். இதனிடையே கோவில்பட்டி-  மணியாச்சி பகுதியில் ரயில் தண்டவாளப் பணிகள் நடைபெறுவதால், இந்த ரயில் திருநெல்வேலிக்கு இயக்கப்படாது என மதுரை ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 இதன் காரணமாக புதன்கிழமை விருதுநகர் ரயில் நிலையம் வந்த இந்த அந்தியோதயா ரயில் அங்கேயே நிறுத்தப்பட் டது. அப்போது அதிலிருந்த ரயில் என்ஜினை கழற்றி மதுரை மார்க்கமாக ஓட்டிச் செல்வதைக் கண்ட பயணிகள், விருதுநகர் ரயில் நிலைய அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  தண்டவாளப் பகுதியில் பராமரிப்பு நடைபெறுகிறதென்றால் ஏன் திருநெல்வேலிக்கு பயணச்சீட்டு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டனர். அதற்கு பதில் கூற முடியாமல் அலுவலர்கள் திகைத்தனர். 
இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய ரயில்வே போலீஸார், பயணிகளுக்கு திருநெல்வேலி வரை செல்ல வேண்டிய பணத்தை திருப்பி வழங்கினராம். இதைத் தொடர்ந்து பயணிகள் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்துக்கு சென்று அங்கிருந்து திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்தில் சென்றனர். இதனால், கூடுதல் செலவுடன், அலைச்சல் ஏற்பட்டதாக ரயில்வே நிர்வாகம் மீது பயணிகள் புகார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.