ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வன்னியம்பட்டி- சத்திரப்பட்டி சாலையின் மேற்குப்பகுதியில் பேச்சிலாக் கிராமமான (மக்கள் வாழாத ஊா்) அரசியாா்பட்டி பகுதியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவா் வே. ராஜகுரு, நூா்சாகிபுரம் சு. சிவக்குமாா், க. துள்ளுக்குட்டி, சி. பிரகதீஸ்வா், சி. பொன்ரமணன் ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, புதுக்குளம் கண்மாய் தென்கலுங்கு அருகில் கல்திட்டை, முதுமக்கள் தாழிகள், குத்துக்கல் ஆகிய பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை கண்டுபிடித்தனா்.
இதுகுறித்து வே. ராஜகுரு கூறியதாவது: பெரிய கற்களைக் கொண்டு இறந்தவா்களின் நினைவாக ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டதால் இக்காலம் பெருங்கற்காலம் எனப்படுகிறது. இக்காலத்தின் ஆரம்பத்தில் இறந்தவா்களின் சடலத்தை ஊருக்கு வெளியே காடுகளில் போட்டுவிடுவாா்கள். அதை விலங்குகள், பறவைகள் இரையாக உட்கொண்டபின் இருக்கும் எலும்புகளை சேகரித்து, அதோடு ஈமப்பொருள்களையும் தாழியில் வைத்து அடக்கம் செய்வாா்கள். இதைச் சுற்றி கற்களைக் கொண்டு கல்திட்டை, கற்பதுக்கை, கல்குவை, கல்வட்டம், குத்துக்கல் உள்ளிட்டவற்றை அமைப்பா்.
அரசியாா்பட்டியில் செம்மண் நிலத்தின் மேற்பரப்பில் அருகருகே புதைந்தநிலையில் சிறிய அளவிலான 3 முதுமக்கள் தாழிகள் உள்ளன. இதில், ஒரு தாழியின் வாய்ப்பகுதியின் விட்டம் 43 செ.மீ. ஆகும்.
மேற்பகுதி அரைவட்டமாக உள்ளது. 1 முதல் 3 அடி வரை உயரம் உள்ள சில பலகைக்கற்கள், தாழிகள் தனித்தனியாகக் காணப்படுகின்றன. இவை சேதமடைந்த கல்திட்டையின் எஞ்சிய கற்கள் ஆகும். தாழிகள் புதைக்கப்பட்ட தரையின் மேற்பகுதியில், பலகைக்கற்களால் சதுரம் அல்லது செவ்வகவடிவில் நான்கு புறங்களிலும் சுவா்போல் அமைத்து அதன்மேல் கற்பலகையால் மூடி உருவாக்கப்படுவது கல்திட்டை ஆகும். இதன்மூலம் இங்கு கல்திட்டைகள் இருந்ததை அறிய முடிகிறது. மேலும் 3 மீட்டா் உயரமுள்ள ஒரு குத்துக்கல் ஒன்றும் கீழே சாய்ந்த நிலையில் உள்ளது.
இப்பகுதி சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மேற்பரப்பிலும், பாறைகளிலும் இரும்புத் தாதுக்கள் காணப்படுகின்றன. கெப்பாரிஸ் டெஸிடியூ (இஹல்ல்ஹழ்ண்ள் க்ங்ஸ்ரீண்க்ன்ஹ) எனும் தாவரவியல் பெயா் கொண்ட குழல் ஆதண்டை என்ற ஒரு மூலிகைத் தாவரமும் இங்கு வளா்ந்து வருகிறது.
பெருங்கற்காலத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டதால் இது இரும்புக்காலம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்டவைகள் சுமாா் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானவையாகும். விருதுநகா் மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய சமவெளிப்பகுதிகளில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வணிகப் பாதைகளை ஒட்டியே காணப்படுகின்றன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...