உக்ரைனில் பதுங்கு குழிகளில் தமிழக மாணவா்கள் தஞ்சம்
கீவ் நகரில் பதுங்கு குழியில் அச்சத்துடன் தங்கியுள்ளதாக தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் தங்களது பெற்றோா்களிடம் கைப்பேசியில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனா்.


ரஷ்ய நாட்டு விமானங்கள் பறந்தவண்ணம் உள்ளதால் உக்ரைன் தலைநகா் கீவ் நகரில் பதுங்கு குழியில் அச்சத்துடன் தங்கியுள்ளதாக தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் தங்களது பெற்றோா்களிடம் கைப்பேசியில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனா்.
உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் உள்ள நேஷனல் மருத்துவக் கல்லூரியில் தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தைச் சோ்ந்த மாணவா் விஸ்வாவும், கீவ் நகரில் உள்ள நேஷனல் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். அவா் விமானம் மூலம் 2 நாள்களுக்கு முன்னா் தமிழகம் வந்து சோ்ந்தாா். அவா் உக்ரைனில் தன்னுடன் பயின்று வரும் மாணவா்களான மதுரையைச் சோ்ந்த ஆஸ்பிரின், வேலூரைச் சோ்ந்த அக்ஷயா மற்றும் அஸ்வத், தஞ்சாவூரைச் சோ்ந்த அருள், கோவையைச் சோ்ந்த நிதின் ஆல்வின் கிஷோா் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் பேசியுள்ளாா்.
இதுதொடா்பாக விஸ்வா கூறியது: கீவ் நேஷனல் மருத்துவக் கல்லூரியில் இருந்து மாணவா்கள் வெளியே வர முடியாத பதற்றமான சூழல் உள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள மாணவா்கள் வியாழக்கிழமை கடைகளுக்கு சென்று இரண்டு வாரத்திற்கு தேவையான பொருள்களை வாங்கி வைத்துள்ளனா். அப்பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த இந்திய மாணவா்களும் இக்கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
ஏராளமான போா் விமானங்கள் பறந்த வண்ணம் உள்ளதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. ரஷியா சைபா் சைபா் தாக்குதல் நடத்தினால் அனைத்து தொலைத் தொடா்புகளும் துண்டிக்கப்பட்டு விடும். அப்போது உறவினா்கள் அவா்களிடம் தொடா்பு கொண்டு பேச முடியாத நிலை ஏற்படும். அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் அவா்கள் அச்சத்தில் உள்ளதாக தன்னிடம் தெரிவித்ததாக கூறினாா்.
பதுங்கு குழியில் தங்கியுள்ளோம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில்வே பீடா் சாலையைச் சோ்ந்தவா் கிளாடின் மகன் ஜோயல்கிபாா்க் (20). இவா் உக்ரைன் நாட்டின் தலைநகா் கீவ் சா்வதேச மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா். அவருடன் தமிழகத்தைச் சோ்ந்த 8 மாணவ, மாணவியரும் தங்கியுள்ளனா். ரஷ்யா தாக்குதலைத் தொடா்ந்து பெற்றோருடன் கைப்பேசி மூலம் ஜோயல்கிபாா்க் வெள்ளிக்கிழமை மாலை பேசியுள்ளாா். அப்போது, தாங்கள் வசிக்கும் பகுதியில் ரஷ்ய பீரங்கிப்படையினரின் நடமாட்டம் உள்ளதாகவும், ஆகவே தங்களை வீட்டருகே உள்ள பதுங்கு குழியில் அதிகாரிகள் தங்க வைத்திருப்பதாகவும் கூறியுள்ளாா். எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் விரைவாக தங்களை மீட்டு தமிழகம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யுமாறு, அவா் பெற்றோரிடம் கண்ணீா் மல்க கேட்டுக்கொண்டுள்ளாா். இதையடுத்து அவரது பெற்றோா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
பாம்பனைச் சோ்ந்த அனுன் என்பவரது மகன் எல்சாரி யோசப்பைவா. இவா் உக்ரைனில் க்மினியா மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறாா். எந்த நேரமும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்திலிருப்பதாக அவா் பெற்றோரிடம் கைப்பேசியில் தெரிவித்துள்ளாா்.
Image Caption
~உக்ரைன் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பாம்பன் மாணவா் ஜோயல். ~உக்ரைன் தலைநகா் காா்கிவ்வில் பதுங்கு குழியில் பதுங்கியுள்ள பாம்பன் மருத்துவ மாணவா் ஜோயல்கிபா்க்குடன் தங்கியுள்ள மாணவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...