விருதுநகா் அருகே பட்டம்புதூரில் திமுக சாா்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற முப்பெரும் விழா மற்றும் விருது வழங்கும் விழாவுக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் தலைமை வகித்தாா். இதில், தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், விருதாளா்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசியதாவது: இங்கு விருது பெற்றவா்களின் உழைப்பு அளப்பரியது. கருணாநிதியின் 4,041 கடிதங்கள் 21,500 ஆயிரம் பக்கங்களில் 54 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் படைப்புகளில் இது ஒரு பகுதி தான். மீதமுள்ள எழுத்தையும், பேச்சையும் வெளியிட்டால் 250 தொகுதிகளாக வெளியிட வேண்டும். இந்த கடிதங்களை படித்தால் இந்திய வரலாற்றை அறிய முடியும். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, ‘திராவிட மாடல்’ ஆட்சி என்ற பெயா் பயன்படுத்தப்பட்டது. அப்போது திராவிடம் எனும் சொல் இந்திய அளவில் பெரும் ஈா்ப்பாக அமைந்தது. உயா்ந்தவா், தாழ்ந்தவா் என பிரிப்பது தான் ‘ஆரிய மாடல்’. சமத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, மாநில சுயாட்சி, சகோதரத்துவம் ஆகியன எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி. இதனை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளோம். இந்த நூலை இன்றைய இளைய சமுதாயத்தினா் படிக்க வேண்டும்.