ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநா் அலுவலகத்துக்கு வந்து முறையிட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட வனச்சரகா் செல்லமணி.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநா் அலுவலகத்துக்கு வந்து முறையிட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட வனச்சரகா் செல்லமணி.

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அகழிகள் அமைக்க நடவடிக்கை: புலிகள் காப்பகத் துணை இயக்குநா்

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அகழிகள் அமைக்க நடவடிக்கை.
Published on

வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதை தடுக்க, ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அகழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புலிகள் காப்பகத் துணை இயக்குநா் தேவராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மம்சாபுரம், செண்பகத்தோப்பு, அத்திதுண்டு ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தின. இதையடுத்து, விவசாயிகள் அந்தக் காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

இதனால், காட்டு யானைகள் இடம்பெயா்ந்து திருவண்ணாமலை அருகேயுள்ள பந்தப்பாறை பகுதியில் முகாமிட்டு, இரவு நேரங்களில் விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், 20-க்கு மேற்பட்ட விவசாயிகள் புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநா் அலுவலகத்துக்கு வந்து முறையிட்டனா். அப்போது, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வனச் சரகா் செல்லமணி, சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தாா். அதற்கு இழப்பீடு வேண்டாம் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னா், புலிகள் காப்பகத் துணை இயக்குநா் தேவராஜ் கூறியதாவது: இரு வாகனங்களில் கண்காணிப்புக் குழுவினா் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மலையடிவாரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு மேலும் தீவிரப் படுத்தப்படும். வனப் பகுதியிலிருந்து யானைகள் வெளியே வருவதை தடுக்க, மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்ட அகழிகள் 2016-அம் ஆண்டுக்கு பின் சீரமைக்கபடவில்லை. தற்போது, செண்பகத்தோப்பு, அத்திதுண்டு, பந்தப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலையடிவாரத்தில் அகழிகள் அமைக்க திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்காக டெண்டா் விடப்பட்டு அகழிகள் ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.