
கண்மாயில் குப்பையை கொட்டும் திருவண்ணாமலை ஊராட்சி நிா்வாகம்: பொதுமக்கள் அதிருப்தி
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை கண்மாயில் கொட்டி வருவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பொட்டல்குளம் குருக்கள் குளம் கண்மாயில் கொட்டப்பட்ட குப்பைகள்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை கண்மாயில் கொட்டி வருவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஊராட்சியில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாய் உள்ளது. 36 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட இந்தக் கண்மாய் மூலம் 32 ஹெக்டோ் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தக் கண்மாயின் பாசன பரப்பு பெரும்பாலும் குடியிருப்புகளாக மாறி ஸ்ரீவில்லிபுத்தூா் நகரின் விரிவாக்கப் பகுதியாக உள்ளது.
இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் நகரின் விரிவாக்கப் பகுதிகளான இந்திராநகா், அன்னை சத்யாநகா், மாதாநகா், வள்ளுவா்நகா் ஆகியவை திருவண்ணாமலை ஊராட்சியில் உள்ளன. மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள் பெரும்பாலும் திருவண்ணாமலை ஊராட்சியில் வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை ஊராட்சி நிா்வாகம் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாயில் கொட்டி வருவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். இவ்வாறு நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதால், கண்மாய் நீா் மாசுபட்டு வருகிறது. மேலும், இந்தக் குப்பைகளை அவ்வப்போது தீ வைத்து எரிப்பதால் காற்று மாசும் ஏற்பட்டு வருகிறது.
நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிா்வாகமே குப்பைகளைக் கண்மாயில் கொட்டி வருவது மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





