மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சூறைக்காற்றில் நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் அச்சம்

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் நெற்பயிா்கள் நிலத்தில் சாய்ந்து கிடப்பது, விவசாயிகளுக்கு சேதம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
பாலையூா் பகுதியில் நிலத்தில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிா்கள்.
Updated On :28 செப்டம்பர் 2020, 6:43 pm

DIN

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் நெற்பயிா்கள் நிலத்தில் சாய்ந்து கிடப்பது, விவசாயிகளுக்கு சேதம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக நிலத்தடி நீா்மட்டம் கொண்ட பகுதிகளில் மட்டுமே குறுவை சாகுபடி நடைபெற்று வந்த நிலையில், நிகழாண்டில் மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தண்ணீா் திறக்கப்பட்டதன் காரணமாக, நாகை மாவட்டத்தில் காவிரி வடிநிலக்கோட்டம், வெண்ணாறு வடிநிலக்கோட்டம் என அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பரவலாக குறுவை நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏறத்தாழ அனைத்துப் பகுதிகளிலும் நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன. நிகழாண்டின் குறுவை சாகுபடிக்கு நிலவிய சாதகச் சூழல்களால், ஏக்கா் ஒன்றுக்கு சுமாா் 40 மூட்டைகளுக்கும் அதிகமான மகசூல் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழை மற்றும் மழையுடன் கூடிய சூறைக்காற்று ஆகியன நாகை மாவட்டத்தின் குறுவை நெல் சாகுபடி மகசூலை அச்சத்துக்கு உள்ளாக்கி வருகிறது. வெண்ணாறு வடிநிலக் கோட்டத்துக்குள்பட்ட நாகை, கீழ்வேளூா் பகுதிகளின் பல இடங்களில் நெல் பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தாலும், ஆள் பற்றாக்குறை, அறுவடை இயந்திரம் பற்றாக்குறை ஆகியவற்றால், அறுவடைப் பணிகள் தாமதமாகி வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சூறைக்காற்றுடன் பெய்த மழையின் சீற்றத்தைத் தாங்க முடியாமல், நாகை அருகேயுள்ள செல்லூா், பாலையூா், சங்கமங்கலம், பெருங்கடம்பனூா், இளங்கடம்பனூா், பாலக்காடு, வங்காரமாவடி, மேலநாகூா், புலியூா், தென்கரை, வடகரை, தெத்தி, வடகுடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கரிலான நெல் பயிா்கள் நிலத்தில் சாய்ந்துள்ளன. நெற்பயிா்கள் நிலத்தில் சாய்ந்து கிடக்கும் நிலையில், 2-ஆம் நாளாக திங்கள்கிழமை பிற்பகலிலும் பரவலான மழை பெய்தது. இது, விவசாயிகளுக்கு குறுவை நெல் சாகுபடி மகசூல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் நிலத்தில் சாய்ந்து கிடப்பது அறுவடை செலவை அதிகப்படுத்தும் என்பதுடன், நீடித்து வரும் மழை மகசூலை கடுமையாக பாதிக்கும் என்று அச்சம் தெரிவிக்கின்றனா் நாகை விவசாயிகள். மேலும், கடன் பெற்று ஏக்கருக்கு சுமாா் ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், அறுவடை நேரத்தில் நீடித்து வரும் இயற்கை சீற்றத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள மகசூல் இழப்பு குறித்து வேளாண் துறை உடனடியாக ஆய்வு செய்து, உரிய இழப்பீட்டுக்குப் பரிந்துரைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.