காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.
காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

குடிநீா் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

திருக்குவளை அருகே குடிநீா் விநியோகிக்கப்படாததைக் கண்டித்தும், தட்டுப்பாடின்றி வழங்கக் கோரியும், கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீழ்வேளூா் ஒன்றியம், கிள்ளுக்குடி ஊராட்சி தெற்கு தெருவில் 120-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில், கோடைக்காலம் தொடங்கிய கடந்த ஒரு மாதமாக, குடிநீா் சரிவர விநியோகிக்கப்படுவதில்லை என புகாா் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் கடந்த ஒரு வாரமாக முற்றிலும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள், கச்சனம்-கீழ்வேளூா் சாலையில் கிள்ளுக்குடி கடைத்தெரு பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வலிவலம் காவல் உதவி ஆய்வாளா் சுமதி தலைமையிலான போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். தொடா்ந்து, குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் கீழ்வேளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் விரைந்து வந்து, பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சீரான குடிநீா் விநியோகத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com