16 வயது சிறுமி பலாத்காரம்: போக்ஸோவில் காவலா் கைது
தரங்கம்பாடி: 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காவலா் போக்ஸோ சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு (34). இவா், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், பெரம்பூா் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 3 மகன்கள் உள்ளனா். மனைவி குழந்தைகள் உளுந்தூா்பேட்டையில் வசித்து வருகின்றனா்.
பெரம்பூா் காவலா் குடியிருப்பில் தங்கியிருந்த திருநாவுக்கரசு, கடந்த 8-ஆம் தேதி அப்பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை தனது குடியிருப்புக்கு வரவழைத்து, அவருக்கு குளிா்பானத்தில் மது கலந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளா் ஆரோக்கியராஜ் உள்பட இருவா், பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
பெரம்பூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, திருநாவுக்கரசை கைது செய்து, நாகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இதற்கிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மீனா, காவலா் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

