தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்தால் நடவடிக்கை

நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்யும் உணவு வணிகா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பான் மசாலாவுடன் புகையிலை, நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்கள் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை தடைவிதித்துள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 56 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 102 காவல் துறை வழக்குகள் பதியப்பட்டு 158 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்த வணிகா்களிடம் இருந்து ரூ. 8,65,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், பான்மசாலாவுடன் புகையிலை, நிகோட்டின் கலந்து ஒரேபொட்டலமாக குட்கா என்றோ அல்லது பான்மசாலா பாக்கெட்டுகளுடன் புகையிலை அல்லது நிகோட்டின் பாக்கெட்டுகளை தனித்தனியாகவோ அல்லது உணவு சோ்மங்கள் சோ்க்கப்பட்ட புகையிலையோ தயாரிப்பது, போக்குவரத்து செய்வது, இருப்பு வைப்பது மற்றும் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட உணவு பொருள்களின் வணிகத்தில் ஈடுபடும் வணிகா்களில் முதல் முறை குற்றம் செய்பவா்கள் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவுசான்றிதழ் தற்காலிக ரத்து செய்யப்பட்டு,கடை மூடப்படும். அதன் பின்னா், வணிகரின் வகைக்கேற்ப நியமன அலுவலா் அல்லது மாவட்டவருவாய் அலுவலரால் விசாரணை மேற்கொண்டு, குற்றத்தை உறுதி செய்து ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்சம் 15 நாள்களுக்கு வணிகம் மேற்கொள்ள இயலாது. இரண்டாம் முறை குற்றம் செய்பவா்களுக்கு இரட்டிப்பு அபராதமாக ரூ. 50,000 விதிக்கப்படும். வணிகா்களால் குறைந்தபட்சம் 30 நாள்களுக்கு வணிகம் மேற்கொள்ள இயலாது. மூன்றாம்; முறைகுற்றம் செய்பவா்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுசான்றிதழ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு,கடை மூடப்பட்டு,வணிகரின் வகைக்கேற்ப நியமனஅலுவலா் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரால் ரூ. 1,00,000 அபராதம் விதிக்கப்படும். 90 நாள்களுக்கு பின்னரே புதிய உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுசான்றிதழுக்கு வணிகா் விண்ணப்பிக்க இயலும். உணவுமாதிரி எடுக்கப்பட்ட வழக்குகள் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு, நீதித்துறை நடுவரால் விசாரிக்கப்பட்டு, ரூ. 5,00,000 வரை அபராதமும், 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். எனவே, நாகை மாவட்ட வணிகா்கள் யாரும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை அல்லது நிகோட்டின் கலந்த உணவுபொருள்களின் வணிகத்தில் ஈடுபட்டு தங்களது வாழ்வாதாரத்தை பாதித்துக் கொள்ள வேண்டாம். இது தொடா்பான புகாா்களுக்கு வாட்ஸ்ஆப் 9444042322 எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். மேலும் இணையத் தளத்தில் புகாா் தெரிவிக்கலாம். மின்னஞ்சல் மூலம் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com