காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

காரைக்காலில் ரூ.21.20 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு

காரைக்காலில் ரூ.21.20 கோடியில் மேற்கொள்ளப்படும் மேற்குப் புறவழிச்சாலை முதல்கட்டத் திட்டப்  பணியை மாவட்ட

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:26 pm

DIN

காரைக்காலில் ரூ.21.20 கோடியில் மேற்கொள்ளப்படும் மேற்குப் புறவழிச்சாலை முதல்கட்டத் திட்டப்  பணியை மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். வரும் ஏப்ரல் மாதத்தில் இது பயன்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.
காரைக்கால் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், காரைக்கால் பகுதியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டப்பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. போதிய நிதியாதாரம் இல்லாததால் தொடங்கிய திட்டப்பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்த திட்டப்பணி காரைக்காலில் கீழகாசாக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பிரிந்து மேற்குப்புறமாக  தலத்தெரு, புதுத்துறை, மேலஓடுதுறை, அக்கரைவட்டம், நிரவி ஆகிய வருவாய் கிராமங்களைக்  கடந்து திருப்பட்டினம் பகுதி திருமலைராஜனாறு பாலம் அருகே இணையும் வகையில் 8.30 கி.மீட்டர் தூரம் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் முதல்கட்டத் திட்டப்பணி கீழகாசாக்குடி பகுதியிலிருந்து திருநள்ளாறு சாலையில் இணையும் வகையில் தொடங்கப்பட்டது.
இந்த திட்டப்பணியை பொதுப்பணித்துறை நிர்வாகம் அண்மையில் தீவிரப்படுத்தியது. தற்போது நடைபெற்றுவரும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டார். பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.சேகர், செயற்பொறியாளர் ஏ.ராஜசேகரன் ஆகியோர் ஆட்சியருக்கு திட்டப்பணி குறித்து விளக்கினர்.
மொத்தமுள்ள 8.30 கி.மீ. தூரத்தில் முதல்கட்டமாக 3 கி.மீ. மட்டும் 45 மீட்டர் அகலத்தில், ரூ.21.20 கோடி திட்டத்தில் நான்கு வழி பாதையாக அமைக்கப்படுவதாகவும், இந்த சாலையின் குறுக்கே 10 வாய்க்காலுக்கான சிறிய பாலம் அமைக்கும் பணி நடந்துவருவதாகவும், சாலையில் மணல் மற்றும் கிராவல் கொட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதன் மேல் பதப்படுத்தப்பட்ட கருங்கல் ஜல்லி கலவை கொண்டு தார்ச் சாலை அமைக்கப்படும். சாலையின் நடுவே தடுப்புச்  சுவர் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படும். பணிகள் வேகமாக நடைபெற்றுவருவதாக ஆட்சியரிடம் அலுவலர்கள் விளக்கிக் கூறினர்.
இந்த சாலையில் சிறப்பம்சமாக, டெர்ராசில் மற்றும் சைக்கோபாண்டு என்கிற ரசாயனக் கலவையை 200 லிட்டர் தண்ணீரில், தலா ஒரு லிட்டர் வீதம் கலந்துகொண்டு சாலையை உழவுப் பணி செய்தார்போல தோண்டி, அதன் மீது கலவை தெளிக்கப்படுகிறது. இதன் மூலம், மண் கிரிப் ஏற்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
இந்த ஆய்வு குறித்து ஆட்சியர் ஆர்.கேசவன் கூறும்போது, இந்த முதல்கட்ட சாலைப் பணியில் இதுவரை ரூ.10.06 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது ஹட்கோ நிதியுதவியில் மேற்கொள்ளப்படும் பணியாகும். எஞ்சியத் தொகைக்குரிய பணிகள் யாவும் முடிக்கப்பட்டு, வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் சாலை பயன்பாட்டுக்கு வரும். இதன் பின்னரே 2-ஆவது கட்டமாக சாலை நீட்டிப்புப் பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.