காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் பிறந்து 4 நாள்களேயான குழந்தை திடீரென இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மருத்துவமனை நிர்வாகத்தின் ஒட்டுமொத்த சீர்கேடே இதுபோன்ற நிலைக்குக் காரணம் என கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், அர்ச்சனா தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. 2 -ஆவது பிரசவத்துக்காக அர்ச்சனாவை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தகுதியான எடையில் இருந்த நிலையில், வேறு சில காரணத்துக்காக குழந்தையை இன்குபேட்டர் பிரிவில் வைத்து பராமரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையொட்டி, குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பி. சித்ராவிடம் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனை நிர்வாகத்தினர், குழந்தையின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இறந்த குழந்தையைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். குழந்தையின் உறவினர்கள் இதுகுறித்து கூறும்போது, பிறந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், இன்குபேட்டர் பிரிவில் அனுமதித்து அவ்வப்போது தாய்ப்பால் புகட்ட குழந்தை தாய்க்கு அருகே கொண்டுவரப்பட்டது. அவ்வாறே திங்கள்கிழமை காலை தாய்ப்பாலுக்காக கொண்டுவரப்பட்ட குழந்தை, பால் புகட்டிய பின்னர் அதன் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மூச்சுத் திணறல் இருந்ததாகவும், வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவ தரப்பினர் தெரிவிக்கின்றனர். சரியான அணுகுமுறை மருத்துவமனையில் இல்லாததே குழந்தை இறக்க நேரிட்டது. மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை, குழந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இல்லையென முன்கூட்டியே தெரிவித்திருந்தால் வெளியூருக்கு கொண்டு செல்ல முயற்சித்திருப்போம் என வேதனை தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காரைக்கால் வட்டச் செயலர் எஸ்.எம். தமீம், கட்சியின் விவசாயிகள் அணி தலைவர் எஸ்.ஏ. முகமது யூசுப் உள்ளிட்டோர் குழந்தையின் உறவினர்களிடமும், மருத்துவமனை வட்டாரத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக வட்டச் செயலர் எஸ்.எம். தமீம் கூறியது :
காரைக்கால் மருத்துவமனையில் இதுபோன்ற சம்பவம் தினமும் எந்த வகையிலாவது நடந்த வண்ணம் இருக்கிறது. தாய், சேய் இறப்பு வீதம் அதிகரிக்கிறது. பிற பிரிவுகளிலும் சரியான மருத்துவம் இல்லாததால் இறப்பு அதிகரிக்கிறது. மருத்துவர்களோ, செவிலியர்களோ கடமையுணர்வுடன் செயல்படுவதே இல்லை. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்ற விடுமுறை நாள்கள் என்றால் மருத்துவமனை மருத்துவர்கள், செலிவியர்கள் போதிய அளவில் பணிக்கு வருவதில்லை. உயிர்க் காக்கும் நிலையமாக திகழக்கூடிய அரசு பொது மருத்துவமனை சுத்தமாக செயலிழந்துவிட்டது.
புதுச்சேரியில் நலவழித்துறை அமைச்சராக உள்ள மல்லாடி கிருஷ்ணாராவ் மாநிலத்தின் தொலைதூர பிராந்தியத்தைச் சேர்ந்தவர். இவர்கள் புதுச்சேரியில் நிர்வாகத்தைப் பார்ப்தோடு சரி. காரைக்கால் பிராந்தியத்துக்கு வருவதே இல்லை. இந்த மருத்துவமனையை மேம்படுத்துவதற்காக எந்தவொரு நடவடிக்கையும் அவர் இதுவரை எடுக்கவில்லை. செயலற்ற அமைச்சராக உள்ளார். இவரிடமிருந்து நலவழித்துறை இலாகாவை புதுச்சேரி முதல்வர், துணை நிலை ஆளுநர் ஆகியோர் பறித்து செயல்படும் பிற அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
காரைக்கால் மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பாளர், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரிகள் நீண்ட ஆண்டுகளாக காரைக்காலிலேயே பணியாற்றுகின்றனர். தினமும் மருத்துவமனைக்கு வருகிறார்கள், பிரச்னைகளை அறிந்து நடவடிக்கை எடுக்கிறார்களா, பிரச்னைகளை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இவர்கள் 10 சதவீதம் கூட கடமையுணர்வுடன் செயல்படுவதில்லை. தலைமை அதிகாரியிலிருந்து கடை நிலை ஊழியர் வரை ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் பிற பிராந்தியங்களுக்கு பணியிட மாற்றம் செய்து, ஒவ்வொரு பிரிவுக்கும் தகுதியானவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காரைக்கால் மருத்துவமனை ஓரளவு சீர் நிலைக்கு வரும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

