காரைக்கால் திறந்தவெளி விளையாட்டரங்கம்: கட்டுமானப் பணி நிறைவடைவது எப்போது? மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வலியுறுத்தல்

காரைக்காலில் ரூ.8.89 கோடி மதிப்பில் நடைபெறும் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் கட்டுமானப் பணிகள் 2016-ஆம் ஆண்டே
Updated on
2 min read

காரைக்காலில் ரூ.8.89 கோடி மதிப்பில் நடைபெறும் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் கட்டுமானப் பணிகள் 2016-ஆம் ஆண்டே முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில் இதுவரை நிறைவு பெறவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பணியின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 
காரைக்காலில் ரூ.12.50 கோடியில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கம் கடந்த 2016-ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்போதைய முதல்வர் என்.ரங்கசாமி, ரூ.8.89 கோடியில் அமைக்கப்படவுள்ள திறந்தவெளி விளையாட்டு அரங்க கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்தார். இந்த திட்டப்பணிக்கான நிதி முழுவதும்  ஹட்கோ அமைப்பின் கடனுதவியாகும். விளையாட்டு அரங்கத்துக்கு அரசு ஆர்ஜிதம் செய்துவைத்திருந்த 27 ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் கட்டிமுடிக்கப்பட்டது.  பிற பகுதியில் வெளி அரங்கம் மற்றும் 3.5 ஏக்கர் பரப்பில் பயிற்சிக்காக வருவோர் தங்குவதற்கு விடுதி கட்டப்படுமென அப்போதே முதல்வர் கூறியிருந்தார். பார்வையாளர் அரங்கம் அமைத்தல், உள்வட்டச் சாலை அமைத்தல், 400 மீட்டர் ஓடுதளம் அமைத்தல், கூடைப்பந்து மையம் மற்றும் கபடி மையம் அமைத்தல், கழிப்பறை உள்ளிட்ட 8 பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு, 2016 ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க கால அளவு நிர்ணயிக்கப்பட்டது.
வெளி அரங்க கட்டுமானம் முழுமையும் முடிக்க நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்து 2 ஆண்டுகள் நிறைவடையுவுள்ள நிலையிலும்,  ஒரு சில பணிகள் மட்டுமே நடந்துள்ளன. எஞ்சியவை நிறைவேறி அரங்கம் பயன்பாட்டுக்கு வருவதற்கு மேலும் காலம் எடுத்துக்கொள்ள நேரிடும் என தெரியவருகிறது.
உள் விளையாட்டரங்கம்: ஒட்டுமொத்த விளையாட்டு அரங்கத்தின் கட்டுப்பாடும் புதுச்சேரி பிராந்திய விளையாட்டுத் துறை வசமிருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்கால் கல்வித் துறையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும், உள் விளையாட்டு அரங்கத்தில் டேபிள் டென்னிஸ், பேட் மிண்டன் மற்றும் உடற் பயிற்சிக்கான கூடம் (ஜிம்) வசதிகள் மட்டுமே உள்ளன. மேலும் சில விளையாட்டுகளுக்கான பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்தும் வகையில் அரங்கத்தின் தரைத்தளம் இல்லை எனவும், இது ஆங்காங்கே சிதிலமடைந்துவிட்டதாகவும், இதனை சீர்படுத்தவேண்டுமெனில் ஒட்டுமொத்த தரைத்தளத்தையும் தகர்த்து, புதுப்பிக்கவேண்டிவரும் என கூறப்படுகிறது. இதனால் உள் விளையாட்டு அரங்கத்தில் கூடுதல் விளையாட்டுகளுக்கான பயிற்சி, போட்டிகளில் ஈடுபடமுடியாத நிலை உள்ளது.
இது குறித்து, சமூக ஆர்வலர்களும், விளையாட்டு வீரர்களும் கூறியது:
காரைக்கால் பகுதியில் பல்வேறு விளையாட்டுத் திறனுள்ளோர் உள்ளனர். இவர்களுக்கு சரியான வகையில் விளையாட்டுப் பயிற்சி எடுத்துக்கொள்ள காரைக்காலில் வசதி இல்லை. முதல்கட்டமாக உள் விளையாட்டு அரங்கம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வெளி அரங்கத்தில் ஓட்டம், கபடி, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடமுடியும். இந்த திட்டப்பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.  
இதனால் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெறும் விளையாட்டு ஆர்வலர்கள், சர்வதேச அளவில் சிறப்பிடம் பெறும் வகையிலான பயிற்சியை எடுத்துக்கொள்ள முடியாத நிலை தொடர்கிறது. இந்த பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
வெளி விளையாட்டரங்கம்: பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம் மற்றும் சாலைகள்) ஏ.ராஜசேகரன் கூறியது: வெளி அரங்கத்தில் பார்வையாளர் அரங்கம்  (கேலரி) அமைக்கும் பணி நடந்துவருகிறது.  உள்வட்டச் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளவேண்டியுள்ளது. பார்வையாளர் அரங்கம் கட்டிய பின்னரே, ஓடுதளம் அமைக்கும் பணி தொடங்க முடியும். ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்கான வளாகம் அமைக்க வேண்டும்.
இந்த திட்டத்துக்கு ஹட்கோ கடனுதவியாக  நிகழாண்டு ரூ.2.5 கோடி கிடைத்தது. இந்த நிதியைக் கொண்டு படிப்படியாக திட்டப்பணிகளை செய்துவருகிறோம். அடுத்த 3 முதல் 6 மாத காலத்தில்  ஒட்டுமொத்தப் பணிகளையும் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
உடற்கல்வி இயக்குநர் மனோகர் கூறியது: உள் அரங்கத்தில் டேபிள் டென்னிஸ், பேட் மிண்டன், ஜிம் ஆகியவற்றுக்கு மட்டும் பயிற்சி பெறமுடியும். மேலும் சில பயிற்சிகளுக்கேற்ப தரைத்தளம் இல்லை. இதை சீரமைப்பது என்பது பெரும் செலவாகும் எனக் கூறப்படுகிறது. மாவட்ட அளவிலான விளையாட்டுக் கவுன்சில் அனுமதி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த அனுமதி பெற்ற பிறகே விளையாட்டு அரங்கத்துக்கான பல்வேறு வசதிகள் ஏற்படுத்த முடியும் என்றார்.
உள் விளையாட்டு அரங்கத்தின் தரைத்தளம் சேதமடைந்திருப்பதால், கூடுதல் விளையாட்டுகளை அங்கு நடத்த முடியாத நிலை உள்ளது. இதனை ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்யவேண்டும். வெளி அரங்கின் ஓடுதளம் அமைத்தல், கேலரி அமைத்தல் உள்ளிட்ட  பல்வேறு பணிகளையும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை செய்து முடித்தால் மட்டுமே காரைக்கால் விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com