/

பள்ளி மாணவர்களுக்கு குடல்புழு நீக்கும் பூச்சி மாத்திரை வழங்கும் பணி

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, குடல் புழு நீக்கும் பூச்சி மாத்திரைகள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. 

Updated On :9 பிப்ரவரி 2019, 12:34 am

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, குடல் புழு நீக்கும் பூச்சி மாத்திரைகள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
புதுச்சேரி அரசின் நலவழித் துறை, காரைக்கால் மாவட்ட சுகாதார இயக்கம் சார்பில் 1 முதல் 19 வயதுக்குள்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு, குடல் புழு நீக்கும் பூச்சி மாத்திரைகள் வழங்கப்பட்டன. மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி, கோயில்பத்தில் உள்ள தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நலவழித் துறை துணை இயக்குநர் (பொ)  க. மோகன்ராஜ்  கலந்துகொண்டு, மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கி பேசியது: குடல் புழு இல்லாத குழந்தைகளே ஆரோக்கியமான குழந்தைகளாவர். குடல் புழு உள்ள குழந்தைகள் எப்போதும் சோர்வாகவும், ஊட்டச் சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையுடனும் காணப்படுவார்கள். இவர்கள் உடல், மன ரீதியில் பலவீனமாக காணப்படுவார்கள்.
எனவேதான் 1 முதல் 19 வயதுக்குள்பட்ட பள்ளி,  கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வளர் இளம் பருவத்தினர் அனைவருக்கும், பள்ளி, கல்லூரி, அங்கன்வாடி மையங்கள் மூலம் இலவசமாக மாத்திரைகள் வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 57 ஆயிரம் பேருக்கு இந்த மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயித்து வழங்கப்பட்டுள்ளன என்றார்.
தயக்கமின்றி மாத்திரைகளை உட்கொள்ளலாம், பக்க விளைவுகள் இருக்காது, குழந்தைகள் ஆரோக்கியம் கருதியே நலவழித் துறையானது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மாத்திரிகளை அந்தந்த பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது  என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் கே. கோவிந்தராஜன்,  நலவழித் துறை புள்ளியியல் அதிகாரி அன்பழகன், தொழில் நுட்ப உதவியாளர் தேவராஜ், பொது சுகாதார செவிலிய அதிகாரி ராஜேஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள்  ஆண்ட்ரூஸ், சிவவடிவேல், சுகாதார உதவியாளர் செல்வமதன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, நலவழித்துறை சுகாதார உதவியாளர் சரண்யா மற்றும் செவிலியர்கள் செய்திருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.