காரைக்காலில் தொடரும் வழிப்பறி, திருட்டு; திணறும் காவல்துறை: புதுச்சேரி முதல்வர் கவனிப்பாரா?

காரைக்கால் மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
Updated on
2 min read

காரைக்கால் மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறிவருகின்றனர். எனவே, புதுச்சேரி முதல்வர் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 2-ஆவது பெரிய பிராந்தியமான காரைக்கால் ஏறக்குறைய 3.50 லட்சம் மக்கள் தொகையை கொண்டதாக உள்ளது. காரைக்காலுக்கு 2005-ஆம் ஆண்டு மாவட்ட அந்தஸ்து வழங்கி, ஐ.ஏ.எஸ். அதிகாரி மாவட்ட ஆட்சியராகவும், ஐ.பி.எஸ். அதிகாரி காவல்துறை அதிகாரியாகவும் பணியமர்த்தப்பட்டுவருகின்றனர். இடைக்காலத்தில் ஆளும் வர்க்கத்தினருக்கு ஆதரவான நிலை வேண்டுமெனில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அல்லாத அதிகாரிகளை மேற்கண்ட பதவிகளுக்கு அமர்த்திவிடுகின்றனர். தற்போதுகூட மாவட்டத்தில் நிரந்தரமாக ஐ.ஏ.எஸ். அதிகாரி மாவட்ட ஆட்சியராக நியமிக்காத  நிலையும், ஐ.பி.எஸ். அல்லாத அதிகாரி மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராகவும் இருக்கும் நிலையும் உள்ளது.
மாவட்டமான பிறகு நிர்வாக ரீதியிலோ, காவல்துறை நிலையிலோ மாவட்டத்துக்கான அந்தஸ்துகளை புதுச்சேரி மாநில அரசுகள் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஏற்படுத்தவில்லை. இதனால் நிர்வாக ரீதியிலும், காவல்துறை ரீதியிலும் எந்தவொரு அனுமதிக்கும் புதுச்சேரி பிராந்தியத்தை எதிர்நோக்கும் நிலையே நீடிக்கிறது.
மேலும், மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப நிர்வாகப் பணியிடங்களும், காவல் பணியிடங்களும் அதிகரிக்கப்படவில்லை. மாவட்டத்தில் காரைக்கால் நகரம், திருப்பட்டினம், நிரவி, திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி ஆகிய பகுதிகளில் காவல் நிலையங்களும், அம்பகரத்தூரில் புறக்காவல் நிலையமும், ஒரு கடலோரக் காவல்நிலையமும் உள்ளன. ஆனால், காவலர்கள் எண்ணிக்கை வெறும் 350 ஆகும்.
மேலும், சிறப்பு புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட்டும் அதன் செயல்பாடுகள் முடக்கப்பட்டுவிட்டன. மோப்ப நாய் செயலற்றதாக இருக்கிறது. வெடிகுண்டு  கண்டறியும் சாதனங்கள், நிபுணர்கள் கிடையாது. காரைக்கால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றால், சில நிலையத்தின் அதிகாரிகள் புகார் தாரரிடமும், எதிர் தரப்பினரிடமும் பேசி ஆதாயம் பெற முயற்சிக்கிறார்கள், கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுகிறார்கள் என சிலர் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த 2107 -செப்டம்பர் மாதம் காரைக்காலில் ஒரு  மருத்துவ அதிகாரி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 125 பவுன் நகைகளை திருடிச் சென்ற வழக்கில் இதுவரை தீர்வு ஏற்படவில்லை. முகமூடி அணிந்து திருடிய நபரின் உருவம் வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் என போலீஸார் தெரித்தும் இதுவரை தீர்வில்லை. 
திருப்பட்டினத்தில் கடந்த 7, 8 ஆண்டுகளுக்கு முன்பு தாலி சங்கிலியை பெண்ணிடம் வழிப்பறி செய்த வழக்கு போன்ற எண்ணற்ற வழக்குகள் தீர்வு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. 
காரைக்காலில் வேலை செய்யும் வெளி மாநிலத்தவர் குறித்த விவரங்கள் காவல்துறையிடம் இல்லை. நகரப் பகுதியிலும், பிற இடங்களிலும் சந்தேகத்துக்கிடமானவர்களின்  நடமாட்டம் இருந்தும் கண்டுகொள்வதில்லை.
கடந்த ஒரு மாதத்துக்கு முதல் கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் ரூ.7 லட்சம் திருடிச் சென்றது உள்ளிட்ட பல வழிப்பறிச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. இவற்றின் மீது எந்தவொரு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்படவில்லை. காவல்துறை மீதான நம்பகத்தன்மை குறைவதால், பொருளை இழந்தோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவும் தயக்கம் காட்டும் நிலையும் உள்ளது.
காவல்துறையின் சிறப்புப் பிரிவு செயலற்று விளங்குகிறது. கடலோரக் காவல் நிலையத்தின் பணிகளும் மந்த நிலைக்கு போய்விட்டது. காவல்துறையின் தலைமை அதிகாரி, காவல்நிலையங்களுக்குச் சென்று  ஆய்வுகள்  செய்வதில்லை. 
இந்நிலையில், திருநள்ளாறு கோயில் குடமுழுக்கு விழாவுக்கு மாவட்டத்தின் 350 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் நிலையங்களில் 2 பேர் மட்டுமே பணியாற்றும் சூழல். இவர்களால் ரோந்துப் பணிகளில் ஈடுபடமுடியவில்லை. இதுபோன்ற சாதகமான சூழலையை பயன்படுத்தி சமூக விரோதிகள், தீவிரமான வழிப்பறி, திருட்டில் ஈடுபடுகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையினரின் செயல்பாடுகள் சமூக விரோதிகளுக்கு துணிச்சலை ஏற்படுத்துவதோடு, வெளியூர் தொழில்முறை குற்றவாளிகள் காரைக்காலில் தொடர் கைவரிசை காட்டுவார்களோ என்ற அச்சம் பொது மக்களிடையே  ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளர் வழக்குரைஞர் எஸ்.பி.செல்வசண்முகம் கூறியது : 
காரைக்கால் காவல் நிலையங்களில் போதுமான காவலர்கள் இல்லை. போக்குவரத்துக் காவல்துறை மிக மோசமாக இருப்பதால், நகரில் நெரிசல், விபத்துகள் பெருகுகிறது. காவலர்களின் பணிகளில் முந்தைய காலத்தைப்போன்ற விவேகம், வேகம் இருக்கவில்லை. மாவட்ட அந்தஸ்துக்கேற்ப காவல்துறையை அரசு மேம்படுத்தவேண்டும். பொதுமக்கள் பல்வேறு நிலையில் அச்சத்தில் இருக்கும் நிலையே காணப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசை நம்பி பயனில்லை. துணை நிலை ஆளுநர் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்றார்.
புதுச்சேரி முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்: புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி திங்கள்கிழமை அரசுத் துறையினருடன் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆய்வு நடத்தவுள்ளார்.
அப்போது, காவல்துறையின் மெத்தனங்கள் குறித்துப் பேசி, மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை அவர் ஏற்படுத்தவேண்டும். சுயநலத்தோடு பணியாற்றக்கூடிய காவல் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து, மக்கள் பணி சிந்தனையுடன் கூடிய அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நிரந்தரமாக காரைக்காலுக்கு ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கவேண்டும் என வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள், இதுபோன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே காரைக்கால் மாவட்டத்தில் உள்ளோர் அச்சமின்றி வாழ்வார்கள். இதனை உறுதிப்படுத்தவேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com